நாட்டின் ஏற்றுமதிப் பொருட்களுக்கு அமெரிக்கா விதித்திருந்த அனைத்து வரிகளையும் விலக்கிக் கொள்வதற்கு அரசாங்கத்தினால் முடிந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.தற்போது 10 வீத தீர்வை வரி மாத்திரமே நடைமுறையில் உள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், இது தற்போதைய அரசாங்கம் அமெரிக்காவுடன் பேணிவரும் சிறந்த ராஜதந்திர உறவுக்கான வெற்றியாகும் என்றும் தெரிவித்தார்.
அதேபோன்று அரசாங்கம் ஐராேப்பிய ஒன்றியத்துடன் சிறந்த உறவைப் பேணி ஜீ. எஸ்.பி. வரிச் சலுகையையும் பெற்றுக்கொள்ள காத்திரமான பேச்சு வார்த்தைகளை நடத்தி வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில், உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
விவாதத்தில் அமைச்சர் தொடர்ந்தும் உரையாற்றியதாவது;
எமது அரசாங்கம் ஆட்சிக்கு வந்து குறுகிய காலத்திலேயே ஏற்றுமதிப் பொருட்களுக்கு அமெரிக்கா
தீர்வை வரி விதித்தது.
இதன்படி எமது நாட்டுக்கு நூற்றுக்கு 44வீத தீர்வை வரி விதிக்கப்பட்டது.இதனால், எமது நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடையும் என்றும் அமெரிக்காவுடன் கலந்துரையாடி இதனை நீக்கிக்கொள்ள அரசாங்கத்தினால் முடியாது போகும் என்றும் பலரும் தெரிவித்தனர். என்னிடம் உடனடியாகவே இது தொடர்பில் அமெரிக்க அதிகாரிகளுடன் கலந்துரையாட விசேட நிபுணர் குழுவொன்றை ஜனாதிபதி நியமித்தார். அந்தக் குழு அமெரிக்காவிலுள்ள இலங்கை தூதரகம் ஊடாக அமெரிக்க அதிகாரிகளுடன் பல தடவைகள் நேரடியாகவும் நிகழ்நிலை ஊடாகவும் பேச்சுவாரத்தைகளை மேற்கொண்டது. இதன் பயனாக 44வீத வரியை 30 வீதமாக குறைத்துக்கொள்ள முடிந்தது. அதன் பின்னரும் தொடர்ந்து முன்னெடுத்த கலந்துரையாடல் மூலம் அந்த வரியை 20 வீதமாக குறைத்துக்கொள்ள முடிந்தது.
அமெரிக்காவின் இந்த தீர்வை வரி அமுல் படுத்தப்பட்டிருந்தால், அது எமது பொருளாதாரத்துக்கு மரண அடியாக அமைந்திருக்கும். அதேவேளை ஆடைத் தொழிற்சாலைகளில் பணியாற்றிவரும் 03 இலட்சத்து 50ஆயிரத்துக்கும் அதிகமானவர்களின் தொழில்கள் அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை மூலம் பாதுகாக்கப்பட்டிருக்கிறது.இறுதியாக நீதிமன்ற உத்தரவுக்கமைய அமெரிக்கா மீண்டும் மேலதிக வரியாக 12,5 வீத வரியை விதிக்க நடவடிக்கை எடுத்திருந்தது. இந்த வரி அதிகமான நாடுகளுக்கு விதிக்கப்பட்டிருந்தது. அந்த நிலையில் இந்த வரியை குறைத்துக்கொள்ளும் வகையில் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த குழு ஒன்று நியமிக்கப்பட்டு, கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டு ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தில் இணங்க முடியுமான விடயங்களில் நாம் இணக்கம் தெரிவித்துள்ள அதே வேளை, இணங்க முடியாத விடயங்களில் முடியாது என உறுதியாகத் தெரிவித்துள்ளோம்.
நாம் அமெரிக்காவுக்கு வருடாந்தம் 2.8 பில்லியன் டொலர் வரை பொருட்களை ஏற்றுமதி செய்கின்றோம். அமெரிக்காவுடன் அரசாங்கம் மிக நெருக்கமான ராஜதந்திர உறவை பேணிவருவதன் மூலமே இந்த வெற்றியை அடைய முடிந்துள்ளது.




