இலங்கை மற்றும் குவைத் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது, துறைமுகம் மற்றும் விமானப் போக்குவரத்து உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை அடையாளம் காண்பது தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று (17) காலை துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சில் நடைபெற்றது.
இலங்கைக்கான குவைத் தூதுவர் சாலெஹ் முபாரக் அல்-சராவி மற்றும் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அனுர கருணாதிலக்க ஆகியோருக்கு இடையில் இந்த சந்திப்பு நடைபெற்றது. பிரதி அமைச்சர் ஜனித ருவன் கொடிதுவக்கு மற்றும் அமைச்சின் செயலாளர் டபிள்யூ.டபிள்யூ.எஸ். மங்கள ஆகியோரும் இதில் கலந்துகொண்டனர்.
புதிய அரசாங்கத்தின் நோக்கங்கள் மற்றும் இதுவரை அடைந்துள்ள முன்னேற்றங்களை குவைத் தூதுவர் பாராட்டியதுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான தொடர்பாடலை மேலும் மேம்படுத்தி, இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது தனது முக்கிய பொறுப்பு எனத் தெரிவித்தார்.
மேலும், இரு நாடுகளுக்கும் இடையில் அரசியல் ஆலோசனை தொடர்பான ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திடுவதன் முக்கியத்துவம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. இதன் மூலம் உள்நாட்டு விவகாரங்கள், கல்வி, சுகாதாரம், துறைமுகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்புக்கான விரிவான கட்டமைப்பை உருவாக்க முடியும் என சுட்டிக்காட்டப்பட்டது.
இலங்கையின் மூலோபாய புவியியல் அமைவிடத்தை கருத்திற்கொண்டு, துறைமுகத் துறையில் அறிவு மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வது, இரு நாடுகளுக்கும் இடையில் பிரதிநிதிக் குழுக்களை பரிமாறிக்கொள்வது மற்றும் தொடர்புடைய நிறுவனங்களுக்கு இடையில் நேரடி ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
அத்துடன், இலங்கையில் காணப்படும் முதலீட்டு வாய்ப்புகள், குறிப்பாக எரிசக்தி மற்றும் கைத்தொழில் துறைகளில் உள்ள வாய்ப்புகள் தொடர்பில் குவைத் முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்ப்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
வர்த்தக ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில் இரு நாடுகளின் வர்த்தக சபைகளுக்கு இடையில் பிரதிநிதிக் குழுக்களை பரிமாறிக்கொள்வதற்கும் இருதரப்பினரும் இணக்கம் தெரிவித்தனர்.
இலங்கை – குவைத் இடையிலான நட்புறவை மேலும் வலுப்படுத்தி, பொருளாதாரம், வர்த்தகம், துறைமுகம், முதலீடு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நடைமுறை ஒத்துழைப்பை விரிவுபடுத்த இரு தரப்பினரும் இணக்கம் தெரிவித்தனர்.




