3 மாவட்டங்களில் கடும் வறட்சி; 39,000 பேர் பாதிப்பு

1 Min Read

நாடு முழுவதும் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக மூன்று மாவட்டங்களில் ஒன்பது பிரதேச செயலகப் பிரிவுகளில் 12,182 குடும்பங்களைச் சேர்ந்த 39,019 பேர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த நிவாரண சேவை நிலையத்தின் சிரேஷ்ட செயலாளர் பிரகீத் தனன்சூரிய தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட குடும்பங்களில் 3,478 குடும்பங்களைச் சேர்ந்த 12,212 பேர் கடுமையான குடிநீர் நெருக்கடியை எதிர்கொண்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

”அம்பாறை, மொனராகலை மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களில் உள்ள நான்கு பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் குடிநீர் பற்றாக்குறையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தடையின்றி குடிநீரை வழங்குவதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடுகள் மாவட்ட செயலாளர்கள் ஊடாக சம்பந்தப்பட்ட பிரதேச செயலாளர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், அரசாங்கத்திடம் போதுமான நீர் பவுசர் வாகனங்கள் இல்லாத சந்தர்ப்பங்களில் தனியார் நீர் பவுசர் வாகனங்களை வாடகைக்குப் பெற்றுக்கொண்டாவது மக்களுக்குத் தடையின்றி குடிநீரை விநியோகிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் கடும் வறட்சியான காலநிலை நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது.

நிலவும் கடும் வறட்சி காரணமாக பல பகுதிகளில் குடிநீர் மற்றும் விவசாயத்துக்கான நீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, நீரின்றி விவசாய நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுப்பது மிகவும் சிரமமாகியுள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர். தற்போதைய நிலைமைக்கு உடனடி நிவாரணம் கிடைக்கும் வகையில் குறிப்பிடத்தக்க மழைப்பொழிவு ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவாக இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் நிலவும் வறட்சியான காலநிலைக்கு எல் நினோ காலநிலை நிலைமை முக்கிய காரணியாக இருப்பதாகவும், எல் நினோ காலநிலை நிகழ்வின் தாக்கம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை நீடிக்கக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *