ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இஸ்ரேலிய குடியேறிகள் மூன்று பலஸ்தீன குடும்பங்களை அவர்களின் வீட்டுக்குள் கடந்த சில நாட்களாக முற்றுகை செய்து வருவதாகவும் அவர்களின் சொத்துகளை களவாடும் நோக்கில் அந்த வீடுகளுக்கான மின்சாரம் மற்றும் நீர் விநியோகத்தையும் துண்டித்திருப்பதாகவும் குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
குச்ரா கிராமத்தில், நப்லுஸ் நகரின் தெற்குப் பகுதியில், கடந்த புதன்கிழமை பதிவான பாதுகாப்புக் கெமரா காட்சிகளில், இஸ்ரேலிய குடியேற்றவாசிகள் வீடுகளில் ஒன்றைச் சூழ்ந்து நிற்பது தெரிகிறது. இந்த குடியேற்றவாசிகளை அகற்றுவதற்கு இஸ்ரேலிய படையினர் தவறி இருப்பதாக அங்கு சிக்கி இருக்கும் குடிமக்கள் தெரிவித்துள்ளனர்.
முற்றுகைக்கு உள்ளாகியுள்ள குடியிருப்பாளர்களில் ஒருவரான ஆயிஷா அபு ரிதா, இந்த முற்றுகை கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்ததாகவும், குடியேற்றவாசிகள் தனது வீட்டுக்குச் செல்லும் அனைத்து நுழைவாயில்களையும் தடுத்து நிறுத்தியதாகவும் அல் ஜசீரா செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.
‘நாங்கள் குடியேற்றவாசிகளால் சூழப்பட்டிருக்கிறோம். ஆனால், இறைவன் நாடினால், நாங்கள் உறுதியுடன் இருப்போம். என்ன நடந்தாலும் எங்கள் வீட்டை விட்டு வெளியேற மாட்டோம். தண்ணீரும் மின்சாரமும் துண்டிக்கப்பட்டிருந்தாலும், நாங்கள் தொடர்ந்து உறுதியுடன் இருப்போம்’ என்றும் அவர் கூறினார்.
குச்ராவில் உள்ள குடியேற்றவாசிகளுக்கு என்ன தேவை என்பது தெளிவாகத் தெரியவில்லை. எனினும் கடந்த காலங்களில், குடியேற்றவாசிகள் பலஸ்தீனியர்களை அவர்களது வீடுகளில் இருந்து வெளியேற்றியதுடன், அவர்களது சொத்துக்களையும் கைப்பற்றியுள்ளனர்.
‘மேற்குக் கரை மிக மோசமான நெருக்கடியான கட்டத்தை எட்டி இருப்பதாக’ ஐ.நா. பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் பேசிய உயர்மட்ட ஐ.நா. அதிகாரி ஒருவர் கடந்த செவ்வாய்க்கிழமை எச்சரித்திருக்கும் நிலையிலேயே இந்த முற்றுகை சம்பவம் இடம்பெற்றுள்ளது.




