நவீன தொழில்நுட்பம், சர்வதேச ஒத்துழைப்புடன் சுங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பாடு
தமக்குச் சொந்தமில்லாத பொதிகளை கொண்டு வர வேண்டாம்
சுங்கத்துறை போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் பிரதிப் பணிப்பாளர் தெரிவிப்பு
இலங்கையின் பூகோள அமைவிடத்தைப் பயன் படுத்தி நாட்டை சர்வதேச போதைப்பொருள் கடத்தல் மற்றும் இடைநிலை (Transit) மையமாக மாற்றுவதற்கு போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் தொடர்ந்து முயற்சித்து வருவதாக, சுங்கத் துறை போதைப்
பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் பிரதிப் பணிப்பாளர் நுவன் அபேநாயக்க தெரிவித்துள்ளார். எனினும், நவீன தொழில்நுட்பம் மற்றும் சர்வதேச ஒத்துழைப்பை அடிப்படையாகக் கொண்ட புதிய வேலைத் திட்டங்களின் மூலம் இத்தகைய முயற்சிகளை சுங்கத் துறை வெற்றிகரமாக முறியடித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ‘நாடு ஒன்றாக’ தேசிய போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையின் கீழ், அண்மையில் சுங்கத் துறையால் மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் பறிமுதல் நடவடிக்கைகள் மற்றும் தற்போதைய முன்னேற்றங்கள் தொடர்பில் நேற்று கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் விளக்கமளித்துள்ள அவர் : இலங்கை சுங்கத் துறையானது தொழில்நுட்பம் தொடர்பில் பாரிய முதலீடுகளை மேற்கொண்டுள்ளது. விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களில் நவீன பெலட் ஸ்கேனர் (Pallet Scanner) மற்றும் பொடி ஸ்கேனர் (Body Scanner) கருவிகளை நிறுவியுள்ளது. போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளில் சர்வதேசத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட முறைமை பயன்படுத்தப்படுவதுடன்,அபாய முகாமைத்துவத்திற்கு 50 சதவீத முக்கியத்துவமும் அதிகாரிகளின் திறமைக்கு 30 சதவீத முக்கியத்துவமும் தொழில்நுட்ப பயன்பாட்டிற்கு 20 சதவீத முக்கியத்துவமும் வழங்கப்பட்டு சுங்கத் துறை அதன் செயற்பாடுகளை தற்போது புதுப்பித்துள்ளது. அண்மைக் காலமாக சிறுவர், முதியவர்கள் மற்றும் கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டவர்களை போதைப்பொருள் கடத்தலுக்கு பயன்படுத்தப்படும் புதிய உபாயம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இவர்களை சோதனை செய்ய அதிகாரிகள் தயங்குவார்கள் என்ற எண்ணத்தில் கடத்தல்காரர்கள் செயற்படுகின்றனர். அந்த வகையில் அண்மையில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் ஒருவர் எச்.ஐ.வி. தொற்றுக்குள்ளானவராவார்.இதனைத் தவிர தாய்லாந்து வழியாக சட்டவிரோதமாக குடியேற முயன்று அங்கிருந்து நாடு கடத்தப்படும் சிலருக்கு பயணச் செலவுகளை வழங்கும் வகையில், போதைப்பொருள் அடங்கிய பயணப்பைகளை கொடுத்து இலங்கைக்கு அனுப்பும் சம்பவங்களும் இடம்பெற்று வருகின்றன. இலங்கை, சர்வதேச மீள் ஏற்றுமதிக்கான முக்கிய இடைநிலை மையமாக இருப்பதால், நாட்டின் வழியாக பிற நாடுகளுக்குச் செல்லும் அனைத்து கொள்கலன்களையும் பரிசோதிக்கும் முழுமையான அதிகாரம் எமது சுங்கத் துறைக்கு உள்ளது.இதற்கு உதாரணமாக, பிரேசிலில் இருந்து இலங்கை வழியாக இந்தியாவிற்கு அனுப்பப்படவிருந்த ஒரு கொள்கலனிலிருந்து 999 கிலோ கொக்கெய்ன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்ட சம்பவத்தைக் குறிப்பிட முடியும்.அந்த வகையில் சந்தேகிக்கப்படும் நாடுகளிலிருந்து வரும் கொள்கலன்கள் அனைத்தும் 100 சதவீதம் முழுமையான பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதையும் குறிப்பிட வேண்டும்.




