‘பிளே ஓப்’ சுற்றுக்கு முன்னர் அணிகளில் முக்கிய மாற்றம்

1 Min Read

லங்கா பிரீமியர் லீக் (எல்.பி.எல்) தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அணிகள் தங்களை பலப்படுத்தும் வகையில் பல வீரர் மாற்றங்களை மேற்கொண்டுள்ளன. இதில் சிம்பாப்வேயின் முன்னணி சகலதுறை ஆட்டக்காரரான சிக்கந்தர் ராஸா தம்புள்ளை சிக்சர்ஸ் அணியில் இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அயர்லாந்து அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் விளையாடுவதற்காக எல்.பிஎல் தொடரில் இருந்து விலகி நாடு திரும்பியுள்ள ஆப்கானிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஃபஸல்ஹக் ஃபாரூக்கிக்குப் பதிலாக சிக்கந்தர் ராஸா தம்புள்ளை சிக்சர்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதனிடையே, கொழும்பு கெப்ஸ் அணியும் தங்கள் அணியில் இரண்டு மாற்றங்களை அறிவித்துள்ளது. காயத்தால் தொடரிலிருந்து விலகியுள்ள குசல் மெண்டிஸுக்குப் பதிலாக சகலதுறை வீரர் அஷேன் பண்டார அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அத்துடன், பங்களாதேஷ் வேகப்பந்து வீச்சாளர் ஹசன் மஹ்மூத் அவுஸ்திரேலியாவுடனான டெஸ்ட் தொடருக்கு தயாராவதற்காக எல்.பி.எல் தொடரிலிருந்து விலகி நாடு திரும்பியுள்ளதால், அவருக்குப் பதிலாக மற்றொரு பங்காளதேஷ் வேகப்பந்து வீச்சாளரான ரிப்பொன் மொண்டோல் கொழும்பு கெப்ஸ் அணியில் இணைந்துள்ளார்.

மறுபுறம் கண்டி றோயல்ஸ் அணி, காயத்தால் தொடரிலிருந்து விலகிய விஷேன் ஹலம்பகேவுக்குப் பதிலாக இளம் வீரர் கவிஜ கமகேவை ஒப்பந்தம் செய்துள்ளது. முன்னதாக, பங்காளதேஷ் வேகப்பந்து வீச்சாளர் தஸ்கின் அஹமட் அவுஸ்திரேலிய அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளதால் இலங்கை வரமாட்டார் என்பதை ஜப்னா கிங்ஸ் அணி நிர்வாகம் உறுதிப்படுத்தியிருந்தது.

எனவே, அவருக்குப் பதிலாக பங்களாதேஷ் அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான தவ்ஹீத் ஹிரிதோய் அணியில் பெயரிடப்பட்டு, ஏற்கனவே அணியுடன் இணைந்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *