நிதி ஸ்திரத்துக்கான மாற்றீடு பரிவர்த்தனை தரப்படுத்தலில் இலங்கை முன்னேற்றம்

2 Min Read

முதலீட்டாளர்களுடனான தொடர்புகளை வலுப்படுத்துவதிலும் கடன் வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பதிலும் நாடு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளதாக, நிதித் திட்டமிடல் பிரதியமைச்சர் அனில் ஜயந்த தெரிவித்துள்ளார்.

‘ஸ்டாண்டர்ட் அண்ட் பூர்ஸ்’ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், முதலீட்டாளர்களின் நம்பிக்கையை வெல்வதற்கு முக்கியமாகும் மாற்றீடு மற்றும் பரிவர்த்தனை தரப்படுத்தலில் இலங்கை ‘CCC+’ இல் இருந்து 2026 ஆம் ஆண்டில் B- தரத்திற்கு உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கையின் கடன் தரவரிசை மற்றும் ஸ்திரத்தன்மை தொடர்பில் ஸ்டாண்டர்ட் அண்ட் பூர்ஸ்’ நிறுவனத்தால் இம்மாதத்தில் வெளியிடப்பட்ட புதிய தரவரிசையின்படி, இலங்கையின் கடன் தரவரிசையை முந்தைய மட்டத்திலேயே ஸ்திரமாகப் பேண அரசாங்கத்தால் முடிந்துள்ளது.

தித்வா சூறாவளி தாக்கம் மற்றும் மத்திய கிழக்கு யுத்த நிலை போன்ற உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பின்னடைவுகளுக்கு மத்தியிலும், பொருளாதாரப் பாதையை மாற்றாமல் முன்னோக்கிச் சென்றமையாலேயே இந்த ஸ்திரத்தன்மையைப் பாதுகாக்க முடிந்தது என்பதைப் பிரத்தியேகமாகக் குறிப்பிட வேண்டும். அதேபோன்று முதலீட்டாளர்களின் நம்பிக்கையை வெல்வதற்கு முக்கியமாகும் மாற்றீடு மற்றும் பரிவர்த்தனை தரவரிசை குறிப்பிடத்தக்க அளவில் வளர்ச்சியடைந்துள்ளது.

முதலீட்டாளர் ஒருவர் ஈட்டும் இலாபத்தை மீண்டும் தனது நாட்டிற்கு எடுத்துச் செல்வதற்கான வசதி மற்றும் அவர்கள் பெற்ற கடன்களையும் வட்டியையும் செலுத்துவதற்காக உள்ளூர் நாணயத்தை வெளிநாட்டு நாணயமாக மாற்றிக்கொள்வதற்கான திறன் ஆகியவை இதன் மூலம் மதிப்பீடு செய்யப்படுகின்றன. 2022 ஆம் ஆண்டில் மிகவும் ஆபத்தான ‘CCC’ மட்டத்தில் இருந்த இந்தத் தரவரிசை, 2025 இல் ‘CCC+’ ஆகவும், 2026 ஆம் ஆண்டாகும்போது ‘B-‘ (B minus) ஆகவும் முன்னேற்றமடைந்துள்ளது. குறிப்பாகப் பேரண்டப் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மை காரணமாகவே இந்நிலை உருவாகியது..தற்போது ஸ்திரமற்ற நிலையிலிருந்து மீண்டு குறிப்பாக வெளிநாட்டு நாணய திரவத்தன்மை மற்றும் கையிருப்பை கட்டியெழுப்புதல் ஆகிய காரணிகள் இதற்கு உதவியுள்ளன. இந்த வெளிநாட்டு நாணயக் கையிருப்பு, இறக்குமதிகளைக் கட்டுப்படுத்தியோ அல்லது பொருளாதாரத்தைச் சுருக்கியோ உருவாக்கப்படவில்லை.

அனைத்துப் பொருளாதார நடவடிக்கைகளும் இயல்பாக நடைபெற அனுமதித்து, மத்திய வங்கியின் மூலோபாயத் தலையீட்டின் மூலம் நிதி ஸ்திரத்தன்மையைப் பேணி கையிருப்பு உயர்த்தப்பட்டுள்ளது. இதனைப் பற்றிய புரிதல், அனுபவம் மற்றும் நிபுணத்துவம் கொண்ட சர்வதேச நிறுவனங்களே இதனைத் தெரிவித்துள்ளனவே தவிர, சமூக வலைத்தளங்களில் உள்ளவர்கள் கூறுவது அல்ல என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *