நிலுவையிலுள்ள 11இலட்சம் வழக்குகளை விரைவுபடுத்த சேவைகளை நீடிக்க வேண்டும்

2 Min Read

நாட்டிலுள்ள நீதிமன்றங்களில் தற்போது 11 இலட்சத்திற்கும் அதிகமான வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் இந்த வழக்குகளை விரைவுபடுத்துவதற்கான ஒரு நடவடிக்கையாகவே

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக நீதியமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார்.இதற்காக அனுபவம் வாய்ந்த நீதிபதிகளின் சேவையைப் பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ள அமைச்சர், வழக்குகளை விரைவில் முடிப்பது தொடர்பில் நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் அமைச்சரவை தீர்மானம் தொடர்பில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர்கள் சந்திப்பில் ஊடகவியலாளர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளனர்.இங்கு கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர்;

நாட்டில் தற்போது 11 இலட்சத்திற்கும் அதிகமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. அந்த வழக்குகளை விரைவுபடுத்துவதற்கும், அனுபவம் வாய்ந்த நீதிபதிகளின் சேவையைப் பெற்றுக்கொள்வதற்கும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன்படி, அனைத்து நீதிபதிகளினதும் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.நாட்டு மக்களுக்கு நாம்,வழங்கிய வாக்குறுதி என்னவென்றால், நீதிமன்றங்களில் மக்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. மாதக்கணக்கில், வருடக் கணக்கில் நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரும்போது மக்கள் அலைக்கழிக்கப்படுகின்றார்கள். நீதிமன்றங்களும் ஏனைய நிறுவனங்களைப் போன்று திறம்படச் செயற்பட வேண்டும். அந்தச் செயல்திறனை அதிகரிப்பதற்கு நீதிபதிகளின் வயதை அதிகரிப்பது அவசியம். இது ஒரு அம்சம் மாத்திரமே. மேலும் பல கோணங்களில் இதனை நாம்,பார்க்க வேண்டியுள்ளது.

குறிப்பாக, அரச பகுப்பாய்வாளர் திணைக்களத்திலுள்ள சிக்கல்களை த் தீர்த்து அதன் செயற்பாடுகளை விரைவுபடுத்த வேண்டும்.அதுவும் வழக்குகள் தேங்கி நிற்கும் ஒரு இடமாகும்.

அதேபோன்று சட்டமா அதிபர் திணைக்களத்தில் காணப்படும் பிரச்சினைகளும் தீர்க்கப்பட வேண்டும்.

அத்துடன் நீதியமைச்சு மற்றும் நீதிமன்றங்களுக்கான ஊழியர்கள் தற்போது நியமிக்கப்பட்டு வருகின்றார்கள். நிலுவையிலுள்ள 11 இலட்சம் வழக்குகளைக் கொண்ட அமைப்பை விரைவுபடுத்துவது மிகவும் அவசியமானதாகும். இதனை முறையாக முன்னெடுக்க வேண்டும்

வழக்கமாக வளர்ச்சியடைந்த ஒரு நாட்டில் 10 இலட்சம் மக்களுக்கு 40 முதல் 60 அல்லது அதற்கு மேற்பட்ட நீதிபதிகள் சேவையில் இருப்பார்கள். எனினும், எமது நாட்டில் 10 இலட்சம் மக்களுக்கு சுமார் 20 நீதிபதிகள் மட்டுமே சேவையில் உள்ளனர். உண்மையில் இந்த நெருக்கடிக்கு முக்கிய காரணம், கடந்த 10-15 வருடங்களாக ஒரு முறையான கணிப்பீட்டுடன் நீதிபதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு இடம்பெறாததால்தான், தற்போது இலட்சக்கணக்கில் வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *