அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர் கிரிஸ்ஸி ஹூலஹான் தலைமையிலான பிரதிநிதிகள் குழு இலங்கை விஜயம்

1 Min Read

இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் இருதரப்பு கூட்டுறவை வலுப்படுத்தல் மற்றும் பரஸ்பர முன்னுரிமைகளை முன்னெடுத்துச் செல்லும் நோக்கங்களின் அடிப்படையில், அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர் கிரிஸ்ஸி ஹூலஹான் தலைமையிலான அமெரிக்க காங்கிரஸ் பிரதிநிதிகள் குழு, இலங்கைக்கு வந்துள்ளது. நாட்டில் எதிர்வரும் (30) வியாழக்கிழமை தங்கவுள்ள இக்குழுவினர், அரசாங்கம், இராணுவம் மற்றும் அரசியல் தலைவர்களுடன் உயர்மட்ட சந்திப்புக்களை நடத்தவுள்ளனர்.

பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) அருண ஜயசேகர, பிரதி சபாநாயகர் டாக்டர் ரிஸ்வி சாலிஹ் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்டோருடன்,இக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். இந்த சந்திப்புகளின் போது, நாடுகடந்த குற்றச் செயல்களைத் தடுப்பதற்கான ஒத்துழைப்பு, வர்த்தக மற்றும் பொருளாதார உறவுகளை விரிவுபடுத்துதல், பிராந்திய ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளன.

அமெரிக்க விமானப்படையின் முன்னாள் அதிகாரியான கிரிஸ்ஸி ஹூலஹான், அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் ஆயுதப் படைகள் தொடர்பான குழுவில் உறுப்பினராகப் பணியாற்றுவதுடன், இராணுவப் பணியாளர்கள் தொடர்பான உபகுழுவின் மூத்த எதிர்க்கட்சி உறுப்பினராகவும் உள்ளார். மேலும், பிரதிநிதிகள் சபையின் நிரந்தர புலனாய்வுத் தெரிவுக்குழுவிலும் இவர், உறுப்பினராக செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த விஜயம், இலங்கையுடனான கூட்டுறவை மேலும் வலுப்படுத்துவதற்கும், சுதந்திரமான, திறந்த மற்றும் வளமான இந்தோ-பசுபிக் பிராந்தியத்தை மேம்படுத்துவதற்குமான அமெரிக்காவின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துவதாக கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *