இலங்கையில் நுகர்வோரின் பாதுகாப்பை உறுதி செய்யவும், சந்தையில் உயர்தரப் பொருட்கள் புழக்கத்தில் இருப்பதற்கு வசதியை ஏற்படுத்தவும், அவற்றை மக்களுக்குப் பாதுகாப்பாக வழங்குவதற்குமாக, ‘வீ-பிரமிதி’ தேசிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
க்ளீன் ஶ்ரீ லங்கா தேசிய வேலைத்திட்டத்துடன் இணைந்து முன்னெடுக்கப்படும், தேசிய நேர்மை வாரத்திற்கு அமைவாக, விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘வீ-பிரமிதி’ (V-Pramithi) தேசிய வேலைத்திட்டம் நேற்று (28) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
புறக்கோட்டை பொதுச் சந்தை வளாகத்தை மையமாகக் கொண்டு இடம்பெற்ற இந்த ஆரம்ப நிகழ்வு, விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் கிரிசாந்த அபேசேன தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வின் போது, புறக்கோட்டை பொதுச் சந்தைக்குள் உள்ள கடைகளுக்குச் சென்ற அதிகாரிகள் பல்வேறு நுகர்வுப் பொருட்களின் மாதிரிகளை எழுமாறாகப் பெற்றுக் கொள்ளும் விசேட நடவடிக்கையை முன்னெடுத்தனர்.
பாதையோர உணவுகள், தேங்காய் எண்ணெய், விளையாட்டுப் பொருட்கள், கித்துள் பாணி போன்ற உணவுப் பொருட்கள், அழகுசாதனப் பொருட்கள், வாசனைத் திரவியங்கள் மற்றும் மின்சார உபகரணங்கள் உள்ளிட்டவை இவற்றில் உள்ளடங்குகின்றன. இவ்வாறு பெறப்பட்ட பொருட்களின் தரம் மற்றும் அதில் உள்ளடங்கியுள்ள பொருட்களை மதிப்பிடும் அதன் தரம் தொடர்பான அறிக்கைகள் பரிசீலிக்கப்படவுள்ளன.
இந்த முக்கிய வேலைத்திட்டம் எதிர்காலத்தில் தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
நம்பகமான மற்றும் சுகாதாரமான பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கு நுகர்வோரை விழிப்பூட்டி அவர்களை ஊக்கப்படுத்துதல் மற்றும் உரிய தரக் கட்டுப்பாடுகளைப் பூர்த்தி செய்யும் உயர்தரப் பொருட்களை உற்பத்தி செய்து விற்பனை செய்வதற்கு தொழில்முனைவோர் மற்றும் வர்த்தகர்களை ஊக்குவித்தல் ஆகிய இரு பிரதான விடயங்களை மேம்படுத்துவதை இவ்வேலைத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இலங்கை கட்டளைகள் நிறுவனம் (SLSI), கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவனம் (ITI), இலங்கை அணுசக்தி சபை ஆகியன இந்த வேலைத்திட்டத்திற்கு அவசியமான தொழில்நுட்ப ஆதரவை வழங்குவதோடு, விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் தலைமையில் முன்னெடுக்கப்படும் இத்திட்டத்திற்கு சுகாதார அமைச்சு, தெங்கு அபிவிருத்தி அதிகார சபை, பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை, இலங்கை பொலிஸார் உள்ளிட்ட பல தரப்பிலிருந்து ஒத்துழைப்பு பெறப்பட்டுள்ளது.
இதன்போது கருத்து தெரிவித்த விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் கிரிசாந்த அபேசேன, “நுகர்வோரின் பாதுகாப்பிற்காக எமது அமைச்சின் ஊடாக ‘வீ-பிரமிதி’ வேலைத்திட்டத்தை நாம் நடைமுறைப்படுத்துகிறோம். இதன் ஊடாக, அன்றாடம் பயன்படுத்தப்படும் நுகர்வுப் பொருட்களின் தரம் தொடர்பில் விரிவான ஆய்வொன்றை மேற்கொள்ள நாம் எதிர்பார்க்கிறோம். பார உலோகங்கள் மற்றும் ஏனைய தீங்கு விளைவிக்கும் கூறுகள் உள்ளிட்ட நச்சுத்தன்மையற்ற உணவுப் பொருட்கள் மற்றும் நுகர்வுப் பொருட்களை சந்தைக்கு அறிமுகப்படுத்துவதற்கு அவசியமான தொழில்நுட்ப வழிகாட்டலை வழங்குவதே எமது நோக்கமாகும்.” என்றார்.
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் பதில் செயலாளர் மஹேஷ் கம்மன்பில, தெரிவிக்கையில், “உற்பத்திகளை நெறிமுறையுடன் மேற்கொள்வது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவே வீ-பிரமிதி வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.”
“தொழில்நுட்பத் திறன் கொண்ட தரப்பினரின் பங்களிப்புகளை ஒருங்கிணைத்து பொதுமக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது எமது நோக்கங்களில் ஒன்றாகும். தரம் தொடர்பான பிரச்சினைகளை கொண்டதாக அடையாளம் காணப்பபடும் தயாரிப்புகளின் தரத்தை மேம்படுத்துவதற்கான விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அறிவை வழங்குவதற்கான நடவடிக்கைகளை இந்த வேலைத்திட்டத்தின் மூலம் நாம் மேற்கொள்வோம்” எனத் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் அதிகாரிகள், தொழில்நுட்ப ஆதரவை வழங்கும் நிறுவனங்களின் பிரதிநிதிகள், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.




