நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீடிப்பதற்கான தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்ல வேண்டிய அவசியம் கிடையாதென, அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பில் இவ்வாறு தெரிவிக்கப்படவுமில்லை என்றும் விபரித்த அமைச்சர், 1978 அரசியலமைப்பில் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை அல்லது ஓய்வுபெறும் வயது தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்துவதற்கான தேவை பற்றி எங்கும் குறிப்பிடப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதில், விளக்கமளிக்கும்போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அமைச்சர்; 1978ஆம் ஆண்டு அரசியலமைப்பை உருவாக்கிய அரசியலமைப்பு மற்றும் சட்ட நிபுணர்கள், சர்வஜன வாக்கெடுப்பு கட்டாயமாக நடத்தப்பட வேண்டிய அரசியலமைப்புப் பிரிவுகளை தெளிவாகவே குறிப்பிட்டுள்ளனர்.அரசியலமைப்பின் 1, 2, 3, 6, 7, 8, 9, 10, 11, 30(2) மற்றும் 62(2) ஆகிய பிரிவுகளைத் திருத்துவதற்கு பாராளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மைக்கு மேலாக சர்வஜன வாக்கெடுப்பும் அவசியமாகும் என்றும் அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பிரிவுகளை வடிவமைத்தவர்கள் அரசியலமைப்பு சட்ட நிபுணர்களும் சட்ட வல்லுநர்களுமாவர். அந்த வகையில் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கோ அல்லது அவர்களின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதற்கோ சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் என மேற்கண்ட எந்த அரசியலமைப்பு பிரிவிலும் குறிப்பிடப்படவில்லை.நேற்றைய இந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்படி விவகாரம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பிய நிலையில், சற்று சூடான வாத விவாதங்களும் அங்கு இடம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.




