கொழும்பு செட்டியார் தெரு மற்றும் பம்பலப்பிட்டி நாட்டுக்கோட்டை நகரத்தார் ஸ்ரீ புதிய கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தின் 152வது ஆண்டு ஆடிவேல் வெள்ளிரத பவனி இன்று (28) ஆரம்பமாகிறது.
நூற்றாண்டுக்கும் மேலான பாரம்பரியத்தையும், பக்தியையும், தமிழர் பண்பாட்டையும் தலைமுறை தலைமுறையாக சுமந்துவரும் இந்த மகத்தான விழா, இன்று இலங்கையின் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இந்து சமய விழாக்களில் ஒன்றாக மதிக்கப்படுகிறது.
இவ்வாலயத்தில் ஆண்டு தோறும் நடைபெறும் ஆடிவேல் வெள்ளிரத பவனி சாதாரண உற்சவமல்ல. இதுவரலாறு, பக்தி, பண்பாடு மற்றும் ஒற்றுமை ஆகியவற்றின் சங்கமமாக விளங்கும் ஆன்மீகப் பெருவிழாவாகும். பல்வேறு சமயத்தினரும் இனத்தினரும் இந்த விழாவைக் கண்டுமகிழ்வதும், பக்தியுடன் கலந்துகொள்வதும் இதன் தனிச்சிறப்பாகும்.
நேற்று (27) மகேஸ்வர பூஜையுடன் பூர்வாங்க கிரியைகள் ஆரம்பமாகின. இன்று (28) காலை 7.00மணிக்கு, செட்டியார்தெரு ஸ்ரீ புதிய கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்திலிருந்து புறப்படும் வெள்ளி இரதம், மெயின்வீதி, சத்தாம்வீதி, ஜனாதிபதி மாளிகை, காலிவீதி, அலரிமாளிகை வழியாக பம்பலபிட்டி ஸ்ரீ புதிய கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தை வந்தடையும்.
ஜூலை 31ஆம் திகதி காலை 8.00மணிக்கு, வெள்ளிரதம் மீண்டும் பம்பலபிட்டி ஆலயத்திலிருந்து புறப்பட்டு, மதியம் காலிமுகத்திடலை வந்தடைந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும். பின்னர் இரவுநேரத்தில் மீண்டும் செட்டியார்தெரு ஆலயத்தை வந்தடைந்து உற்சவம் இனிதே நிறைவடையும்.




