குத்துச்சண்டையில் ரவிந்து இலகு வெற்றியுடன் ’16 சுற்று’க்கு தகுதி

2 Min Read

ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வரும் பொதுநலவாய விளையாட்டுப் போட்டியின் ஆண்களுக்கான 16 கிலோகிராம் எடைப் பிரிவு குத்துச் சண்டையில் இலங்கையின் ரவிந்து ஜயனாத் வெற்றியீட்டி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.

கடந்த ஜூலை 23 ஆம் திகதி ஆரம்பமான பொதுநலவாய விளையாட்டுப் போட்டியின் இரண்டாவது நாளானநேற்று முன்தினம் (25) நடைபெற்ற 32 சுற்றில் பங்கேற்ற ரவிந்து, சொலமன் தீவுகளின் மக்ஸ் மகானாவை எதிர்கொண்டார். இதில் முழு ஆதிக்கம் செலுத்திய ரவிந்து போட்டியை 5–0 என வெற்றியீட்டினார். இதன்படி 16 சுற்றுக்கு முன்னேறிய 26 வயது ரவிந்து இன்று (27) கெர்சி நாட்டின் நியல் அடம்ஸை எதிர்கொள்ளவுள்ளார்.

இதனிடையே ஆண்களுக்கான 80 கிலோகிராம் எடைப் பிரிவில் களமிறங்கிய இலங்கையின் சினிஜ சுதும்ப 32 சுற்றின் கனடா நாட்டின் ஜோஷுவா ஒபொரியிடம் தோல்வியை சந்தித்தார்.

பொதுநலவாய போட்டிகளில் நீச்சல் போட்டிகள் தற்போது இடம்பெற்று வருவதோடு நேற்று முன்தினம் நடந்த பெண்களுக்கான 100 மீற்றர் பாக்ஸ்ட்ரோக் போட்டியில் இலங்கையின் மினகி ரூபசிங் பங்கேற்றார். இரண்டாது ஆரம்பச் சுற்றுப் போட்டியில் இடம்பெற்ற அவர் போட்டியை 1.06.52 நிமிடங்களில் நிறைவு செய்து 3ஆவது இடத்தைப் பிடித்தார். ஆரம்ப சுற்றில் ஒட்டுமொத்த வீராங்கனைகள் இடையே அவரால் 25 ஆவது இடத்தைப் பிடிக்க முடிந்தது.

அதேபோன்று ஆண்களுக்கான 50 மீற்றர் பிரீ ஸ்டைல் போட்டியில் பங்கேற்ற இலங்கையின் எம்.எப். மொஹமட் ஆரம்பச் சுற்றில் 245.17 விநாடிகளில் போட்டியை நிறைவு செய்து இரண்டாவது இடத்தைப் பிடித்தார். ஆரம்பச் சுற்றில் பங்கேற்ற மொத்த வீரர்கள் இடையே அவருக்கு 39 ஆவது இடம் கிடைத்தது. இதேவேளை, கலைநய ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில் பங்கேற்ற டியானா சுமனசேகர 28 ஆவது இடத்தையும், நூயாரா பெர்னாண்டோ 35 ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

பொதுநலவாய விளையாட்டுப் போட்டியின் பதக்கப்பட்டியலில் அவுஸ்திரேலியா 12 தங்கப் பதக்கங்களுடன் முதல் இடத்தில் ஆதிக்கம் செலுத்துவதோடு இங்கிலாந்து மற்றும் நைஜீரியா தலா 3 தங்கங்களுடன் முறையே இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களில் உள்ளன.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *