கொழும்பு துறைமுக நகர வளாகத்தில் சீனப் பிரஜைகளுக்கு இடையில் ஏற்பட்ட மோதல், கடத்தல் மற்றும் கொலையில் முடிந்துள்ள சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணைகளை மேற்கொண்டு உண்மைகளை விரைவில் கண்டறியுமாறு, இலங்கையிலுள்ள சீனத் தூதரகம் இலங்கை பொலிஸாரைக் கேட்டுக்கொண்டுள்ளது.
கடந்த புதன்கிழமை (22) நள்ளிரவு துறைமுக நகரிலுள்ள தொங்கு பாலத்தில் மூன்று சீனப் பிரஜைகள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, கறுப்பு நிற வேனில் வந்த சுமார் 20 பேர் கொண்ட சீனக் கும்பல் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. துப்பாக்கிகளைக் காட்டி மிரட்டிய அந்த கும்பல், மூவரின் கை கால்களைக் கட்டி, முகத்தை மூடித் தாக்கிய பின்னர் அவர்களைக் கடத்திச் சென்றுள்ளது.
கடத்தப்பட்டவர்களில் இருவர் பின்னர் துறைமுக நகரிலேயே கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் சந்தேகநபர்களால் கைவிடப்பட்டிருந்தனர். அவர்கள் அங்கிருந்து தப்பித்து வந்து பொலிஸில் முறைப்பாடு அளித்த நிலையில், கடத்தப்பட்ட மூன்றாவது நபரான ‘ஹாவ் சாங்’ (Hao Song) என்பவர் எஹெலியகொட, கரதன காட்டுப் பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அவரது உடலை கற்களால் மூடி மறைக்க முயன்றுள்ளதுடன், கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் பலத்த காயங்களுடன் அவரது உடல் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தக் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கருதப்படும் வாகனம் மற்றும் ஒரு கைத்துப்பாக்கி என்பனவும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்தக் கொடூரச் சம்பவம் தொடர்பில் இலங்கையிலுள்ள சீனத் தூதரகம் ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ளதுடன், இது குறித்து முறையான விசாரணைகளை முன்னெடுத்து உண்மைகளை விரைவில் கண்டறியுமாறு இலங்கை பொலிஸாரைக் கேட்டுக்கொண்டுள்ளது.
அத்துடன், இலங்கையில் வசிக்கும் சீனப் பிரஜைகள் தமது தனிப்பட்ட பாதுகாப்பு குறித்து அதிக விழிப்புடன் இருக்குமாறும், ஏதேனும் அவசர நிலைகள் ஏற்பட்டால் உடனடியாக பொலிஸாரையோ அல்லது தூதரகத்தையோ தொடர்புகொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளது.




