ரஷ்ய எரிபொருள் நிலையங்களை இலங்கையில் திறக்க நடவடிக்கை

1 Min Read

இலங்கையின் எரிபொருள் தேவையை உறுதி செய்யும் நோக்கில் ரஷ்யாவுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளின் பலனாக, இரு ரஷ்ய நிறுவனங்கள் இலங்கையில் எரிபொருள் விற்பனை நிலையங்களைத் திறப்பதற்கான முறையான பதிவுகளை மேற்கொண்டுள்ளதாக வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்தார்.திருகோணமலையில் நேற்றுமுன்தினம் (18) மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்தத் தகவலை வெளியிட்டார்.

அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள யுத்த சூழ்நிலையைத் தொடர்ந்து உலகளவில் எரிபொருள் நெருக்கடி ஒன்று உருவாகத் தொடங்கி யுள்ளது. இது சுற்றுலாத்துறையிலும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. எனினும், ஒரு பொறுப்புள்ள அரசாங்கம் என்ற வகையில் நாம் மேற்கொண்ட பல்வேறு முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் காரணமாக, நாட்டின் பொருளாதாரத்தைப் பாதுகாக்க முடிந்துள்ளது.

கடந்த காலங்களில் உலகளவில் எரிபொருள் விநியோகத்தில் எந்தப் பாதிப்பும் இல்லாத போதும், இலங்கையில் நிலவிய அந்நியச் செலவாணி பற்றாக்குறை காரணமாகவே எரிபொருளைச் சீராகப் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. சவால்களை எதிர்கொள்ளும் நோக்கில் அண்மையில் இலங்கை வந்திருந்த ரஷ்ய வெளிவிவகார பிரதி அமைச்சர் மற்றும் ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர் ஆகியோருடன் உயர்மட்டப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன.அதன் பிரதிபலனாகவே, இரு ரஷ்ய நிறுவனங்களுக்கு இலங்கையில் எரிபொருள் விற்பனை நிலையங்களைத் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நடைமுறைகள் அனைத்தும் நாட்டின் முறையான சட்ட திட்டங்களுக்கு இணங்கவே முன்னெடுக்கப்பட்டுள்ளன. தற்போது அந்த இரு ரஷ்ய நிறுவனங்களும் தங்களுக்கான முறையான அனுமதிகளையும் பதிவுகளையும் பெற்றுக்கொண்டுள்ளன. சுற்றுலாத்துறை, எரிபொருள் விநியோகம் என எந்தவொரு துறையாக இருந்தாலும், உலகளாவிய சவால்களுக்கு முகம்கொடுக்கும் வகையில் அரசாங்கம் முன்கூட்டியே தற்காப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

கடந்த கால பொருளாதார நெருக்கடியினால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட இலங்கை, மீண்டும் அத்தகையதொரு நிலைக்குள் தள்ளப்படக் கூடாது என்பதில் ஜனாதிபதியும் அரச நிர்வாகமும் முழுமூச்சாகச் செயற்பட்டு வருவதாகவும் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா உறுதியளித்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *