– 350 ஏக்கர் நிலங்கள் மீண்டும் செழிப்படைய வழிவகுப்பு
பதுளை மாவட்டத்தின் மீகஹகிவுல பிரதேசத்தில் அமைந்துள்ள தல்தென மகா நீர்ப்பாசனத் திட்டத்தின் நிரந்தரப் புனரமைப்புப் பணிகள் நேற்று (18) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன.
‘டிட்வா’ சூறாவளி காரணமாகப் பல இடங்களில் உடைப்பெடுத்துக் கடுமையாகப் பாதிப்புக்குள்ளாகியிருந்த இந்த நீர்ப்பாசனத் திட்டத்தை மீளக் கட்டியெழுப்புவது விவசாயிகளின் நீண்டகாலக் கோரிக்கையாக இருந்தது. முன்னதாக, சூறாவளி அனர்த்தத்தின் போது சேதமடைந்த இந்தக் கட்டமைப்பை, நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நேரடிக் கண்காணிப்பின் கீழ், பிரதேச விவசாயிகள் மற்றும் முப்படையினரின் பங்களிப்புடன் மிகக் குறுகிய காலத்திற்குள் தற்காலிகமாகப் புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
இந்தத் தற்காலிகத் திருத்தப் பணிகளைத் தொடர்ந்து, விவசாயிகளின் பயிர்ச்செய்கை நடவடிக்கைகள் பாதிக்கப்படாத வகையில் ஒரு பெரும் சிரமதானப் பணி முன்னெடுக்கப்பட்டு, 2026 ஜனவரி முதல் மீண்டும் நீர் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டது. வெறும் தற்காலிகத் தீர்வுகளுடன் மாத்திரம் நின்றுவிடாமல், தற்போதுள்ள அரசாங்கம் 1,227 இலட்சம் ரூபா (122.7 மில்லியன்) என்ற பாரிய நிதியை இதற்காக ஒதுக்கி, திட்டத்தை நிரந்தரமாகப் புனரமைக்க இன்று நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் மூலம் சுமார் 350 ஏக்கர் விவசாய நிலங்களுக்குத் தடையின்றி நீர் விநியோகம் கிடைக்கவுள்ளதுடன், இப்பகுதி மக்களின் விவசாயப் பொருளாதாரத்திற்கு இது ஒரு நிலையான மற்றும் நீண்டகாலப் பலனை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிகழ்வில், ஊவா மாகாண ஆளுநர் கபில ஜயசேகர, பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுதத் பலகல்ல, சொரணாதொட்ட பிரதேச சபையின் தவிசாளர் ஜயலத் எதிரிமான்ன உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
இவர்களுடன் பதுளை மாவட்ட நீர்ப்பாசனப் பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள், மீகஹகிவுல பிரதேச செயலாளர் மற்றும் பிரதேசத்தைச் சேர்ந்த பெருந்திரளான விவசாயிகளும் கலந்துகொண்டு தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.




