சக்கர நாற்காலியில் வந்த அங்கோலா ‘போதை’ பாட்டி: ரூ. 10 மில். கொக்கைன் மீட்பு!

1 Min Read

கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நேற்று (17) சக்கர நாற்காலியில் வந்த 54 வயதுடைய வெளிநாட்டுப் பெண் ஒருவர், சுமார் ரூ. 10 மில்லியன் தெரு மதிப்பிலான கொக்கைன் போதைப்பொருளுடன் சுங்கப் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அங்கோலா நாட்டைச் சேர்ந்த இந்தப் பெண், அங்கோலாவிலிருந்து எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபா மற்றும் டோஹா வழியாக QR 654 எனும் விமானம் மூலம் இலங்கை வந்தடைந்துள்ளார்.

விமான நிலைய சோதனைகளின் போது அதிகாரிகளின் பார்வையில் இருந்து தப்பிக்க சக்கர நாற்காலியைப் பயன்படுத்திய இந்தப் பெண், விசாரணைகளின் போது தனது உடலில் மறைத்து வைத்திருந்த 14 கொக்கைன் அடங்கிய கெப்சியூல் உருண்டைகளை சுங்கப் பிரிவினரிடம் தானாகவே முன்வந்து ஒப்படைத்துள்ளார்.

அத்துடன், தான் மேலும் அவ்வாறான பல போதைப்பொருள் வில்லைகளை விழுங்கியுள்ளதாகவும் அவர் அதிகாரிகளிடம் ஒப்புக்கொண்டுள்ளார். இதுவரை மீட்கப்பட்டுள்ள 237 கிராம் எடையுள்ள போதைப்பொருளின் தெரு மதிப்பு சுமார் ரூ. 10 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.

சந்தேகநபர் மற்றும் அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் மேலதிக விசாரணைகளுக்காகப் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவிடம் (PNB) ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

அவரது வயிற்றுக்குள் இருப்பதாகக் கூறப்படும் ஏனைய உருண்டைகளை மீட்கும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *