சவர்க்காரத்தின் மூலப்பொருட்கள் குறிப்பிடப்பட வேண்டும்

1 Min Read

இலங்கையில் நுகர்வோர் சருமத்தில் பயன்படுத்தும் சவர்க்கார உற்பத்திகளின் தரம் மற்றும் அதன் உள்ளடக்கம் தொடர்பில் வெளிப்படைத்தன்மையைப் பேணுவதற்குப் புதிய சட்டங்களை இயற்றுமாறு நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தேசிய இயக்கம் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

சருமத்தில் பயன்படுத்துப்படுகின்ற, சந்தைக்கு விநியோகிக்கப்படும் சவர்க்காரங்களின் பொதிகளில், அதன் பெயர் மற்றும் அதில் அடங்கியுள்ள கொழுப்பு சதவீதம் (TFM பெறுமதி) ஆகியவற்றைக் காட்சிப்படுத்துவதைக் கட்டாயமாக்கி பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை அண்மையில் ஒரு விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டிருந்தது.

அதிகாரசபையின் இந்தத் தீர்மானத்தை ஒரு நுகர்வோர் அமைப்பு என்ற ரீதியில் வரவேற்பதாகத் தெரிவித்துள்ள அந்த இயக்கத்தின் தலைவர் ரஞ்சித் விதானகே, இது மாத்திரம் நுகர்வோரின் பாதுகாப்பிற்குப் போதுமானதல்ல எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

சவற்காரத்தின் கொழுப்பு சதவீதத்தைப் போலவே, அதனை உற்பத்தி செய்வதற்குப் பயன்படுத்தப்படும் ஏனைய மூலப்பொருட்கள் மற்றும் இரசாயனங்கள் குறித்து நுகர்வோர் அறிந்திருப்பது அவர்களின் அடிப்படை உரிமையாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

எனவே, உற்பத்தியின் போது பயன்படுத்தப்பட்ட அனைத்து மூலப்பொருட்களின் விபரங்களையும் அதன் உறையில் அச்சிடுவதைக் கட்டாயமாக்கும் வகையில் மற்றுமொரு புதிய வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுமாறு அவர் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மக்கள் தமது சருமத்தின் ஆரோக்கியத்திற்காகப் பயன்படுத்தும் இத்தகைய அழகு சாதனப் பொருட்களில் என்ன கலக்கப்படுகின்றன என்பதைத் தெளிவாக அறிந்துகொள்வதன் மூலமே, தமக்குப் பொருத்தமான தரமான தயாரிப்புகளை அவர்களால் தேர்ந்தெடுக்க முடியும் என அந்த அமைப்பு மேலும் வலியுறுத்தியுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *