உணவுப் பொதிக்குள் ரூ. 90 மில்லியன் கொக்கைன்

1 Min Read

இலங்கை சுங்கப் பிரிவின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் (NCU) அதிகாரிகள் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையின் போது, சுமார் ரூ. 90.8 மில்லியன் பெறுமதியான கொக்கைன் போதைப்பொருளை இலங்கைக்குக் கடத்த முயன்ற வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இன்று (18) கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 23 வயதுடைய மலேசியப் பிரஜை என அடையாளம் காணப்பட்டுள்ளார். சந்தேகநபர் இன்று (18) காலை 9.30 மணியளவில் துபாயிலிருந்து எமிரேட்ஸ் விமான சேவைக்குச் சொந்தமான EK650 என்ற விமானம் மூலம் நாட்டை வந்தடைந்துள்ளார். சந்தேக நபர் கொண்டு வந்த தனது கைப்பைக்குள் இருந்த உணவுப் பாத்திரங்களுக்குள் மிகவும் சூட்சுமமான முறையில் 92 கெப்சியூல்களில் இந்தப் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்தமை சுங்க அதிகாரிகளினால் முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போது கண்டறியப்பட்டது.

சுங்கப் பிரிவினரால் கைப்பற்றப்பட்ட கொக்கைன் போதைப்பொருளின் மொத்த நிறை 1,816 கிராம் ஆகும். இதன் தெரு மதிப்பு சுமார் ரூ. 90.8 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.

முதற்கட்ட விசாரணைகளின் பின்னர், கைப்பற்றப்பட்ட போதைப்பொருளுடன் சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காகப் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவிடம் (PNB) ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *