2026ஆம் ஆண்டுக்கான லங்கா பிரீமியர் லீக் தொடரில் பங்கேற்கும் யாழ்ப்பாண கிங்ஸ் அணியின் உரிமையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளியான ஊடகச் செய்திகள் தொடர்பில் கிரிக்கெட் நிறுவனம் இன்று (17) உத்தியோகபூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
விளையாட்டுத் துறையுடன் தொடர்புடைய குற்றங்களைத் தடுக்கும் விசேட விசாரணைப் பிரிவினால் (SIU), யாழ்ப்பாண கிங்ஸ் அணியின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படும் தகவலை கிரிக்கெட் நிறுவனம் கவனத்தில் கொண்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பான விசாரணைகளுக்கு விசேட விசாரணைப் பிரிவு (SIU) ஏதேனும் உதவியைக் கோரும் பட்சத்தில், கிரிக்கெட் நிறுவனம் மற்றும் லங்கா பிரீமியர் லீக் நிர்வாகம் தங்களது முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லங்கா பிரீமியர் லீக் தொடரின் நேர்மையைப் பாதுகாப்பதில் கிரிக்கெட் நிறுவனம் மிக உறுதியாக உள்ளது.
போட்டித் தொடருடன் தொடர்புடைய எந்தவொரு தரப்பினரும் ஊழல், தவறான நடத்தை அல்லது முறைகேடுகளில் ஈடுபடுவதை ஒருபோதும் சகித்துக் கொள்ளப் போவதில்லை என கிரிக்கெட் நிறுவனம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.




