தேங்கிக்கிடக்கும் வழக்குகளை விரைவாகத் தீர்க்க அனுபவம் வாய்ந்த நீதிபதிகள் அவசியம்; அரசியலமைப்பு திருத்தம் மூலம் தீர்வு காண வாசுதேவ நாணயக்கார அழைப்பு விடுத்துள்ளார்.
ஜனநாயக இடதுசாரி முன்னணியின் செயலாளர் வாசுதேவ நாணயக்கார, இலங்கையின் நீதித்துறையில் நிலவும் சவால்களை எதிர்கொள்ளும் வகையில் ஒரு ஊடக அறிக்கையை வெளியிட்டுள்ள அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நீதி வழங்கப்படுவது மாத்திரமல்ல, அது வழங்கப்படுவது அனைவருக்கும் தெளிவாகத் தெரிய வேண்டும்” என்ற அடிப்படைச் சட்டக் கோட்பாட்டைச் சுட்டிக்காட்டியுள்ள அவர், உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். நீதிமன்றங்களின் சேவைத் தேவைகளை அடிப்படையாகக் கொண்டே இந்தச் சேவைக்கால நீடிப்பு அமைய வேண்டும் என்றும், இதன் மூலம் அனுபவம் வாய்ந்த நீதிபதிகளின் சேவையைத் தொடர்ந்து நீதித்துறைக்குப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது உயர்நீதிமன்றத்தில் நிலவும் நீதிபதி வெற்றிடங்கள் காரணமாக வழக்குகள் முடிவுக்குக் கொண்டுவரப்படுவதில் பாரிய தாமதங்கள் ஏற்படுவதாகச் சுட்டிக்காட்டியுள்ள அவர், இவ்வாறான வெற்றிடங்களைத் தாமதமின்றி நிரப்புவது அவசியமானது எனக் கூறியுள்ளார். மக்களின் இறையாண்மையைப் பாதுகாப்பதற்கும், பொது நலனை உறுதிப்படுத்துவதற்கும் நாடாளுமன்றம் மற்றும் அரசியலமைப்பு சபை இணைந்து இது தொடர்பான தேவையான சட்டத் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்பது அவரது முக்கிய கோரிக்கையாகும்.
குறிப்பாக, இந்த விவகாரம் குறித்து ஒரு மக்கள் கருத்துக் கணிப்பை நடத்தி, அதன் மூலம் பெறப்படும் மக்கள் ஆணையின் அடிப்படையில் சட்டமாக நடைமுறைப்படுத்துவதே மிகவும் சரியான மற்றும் ஜனநாயகமான வழிமுறையாக இருக்கும் என அவர் தனது அறிக்கையில் விவரித்துள்ளார்.
மேலும், நீண்டகால அனுபவமும் முதிர்ச்சியும் கொண்ட நீதிபதிகள் பதவியில் நீடிப்பது, நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கும் ஆயிரக்கணக்கான வழக்குகளை விரைவாக விசாரித்து முடிக்க உதவும் என அவர் நம்புகிறார்.
இந்தச் சேவைக்கால நீடிப்பானது உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு மாத்திரமன்றி, அனைத்து மட்ட நீதித்துறை அதிகாரிகளுக்கும் பொருந்தக்கூடிய வகையில் இரண்டு கட்டங்களாக நடைமுறைப்படுத்தப்படலாம் எனவும் அவர் யோசனை முன்வைத்துள்ளார். நீதிபதிகளை உற்சாகப்படுத்தும் வகையிலும், நாட்டின் நீதித்துறையின் கௌரவத்தையும் வினைத்திறனையும் பாதுகாக்கும் வகையிலும் இந்த நடவடிக்கைகள் அமைய வேண்டும் என வாசுதேவ நாணயக்கார தனது அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.




