இலங்கையிலிருந்து லித்துவேனியா நாட்டிற்கு வேலைக்காகச் செல்ல விரும்புபவர்களைக் குறிவைத்து சில மோசடி முகவர்கள் மற்றும் நபர்கள் செயற்பட்டு வருவது தொடர்பில் இலங்கைக்கான லித்துவேனியா குடியரசின் தூதரகம் பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை ஒன்றினை விடுத்துள்ளது.
சுற்றுலா வீசாக்களில் லித்துவேனியாவிற்குச் சென்று அங்கு வேலைவாய்ப்புகளைப் பெற்றுக்கொள்ள முடியும் எனக்கூறிப் பலரிடமிருந்து பெருமளவிலான பணம் அறவிடப்படுவதாகத் தூதரகத்திற்குப் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
எனினும், சுற்றுலா வீசாவில் அந்த நாட்டிற்குள் நுழைந்து எவ்வித வேலைவாய்ப்பையும் பெற்றுக்கொள்வது என்பது நடைமுறையில் சாத்தியமற்றது எனத் தூதரகம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
இவ்வாறு போலியான வாக்குறுதிகளை வழங்கி எவரேனும் உங்களிடம் பணம் கோரினால், அது ஒரு திட்டமிடப்பட்ட மோசடி முயற்சியாக இருக்கலாம் என்பதால் பொதுமக்கள் இத்தகைய பொய்களை நம்பி ஏமாற வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள தூதரகத்தின் கொன்சியூலர், இராஜதந்திர மற்றும் அரசியல் விவகாரங்கள், பொதுமக்கள் தொடர்பு மற்றும் தூதரக விவகாரங்களுக்கான பணிப்பாளர் கஞ்சன கொடித்துவக்கு, வெளிநாட்டு வேலைவாய்ப்புகளைத் தேடும் இலங்கையர்கள் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தினால் (SLBFE) அங்கீகரிக்கப்பட்ட பதிவு செய்யப்பட்ட வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள் ஊடாக மாத்திரமே சட்டரீதியான நடைமுறைகளைப் பின்பற்றுமாறு வலியுறுத்தியுள்ளார்.
பொதுமக்களின் பணம், பாதுகாப்பு மற்றும் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் நோக்கில் இவ்வாறான மோசடியான வேலை வாய்ப்பு சலுகைகள் குறித்து தூதரகம் தொடர்ந்தும் கண்காணித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். லித்துவேனியாவில் உயர்கல்வி கற்க அல்லது சட்டபூர்வமான வேலைவாய்ப்புகளைப் பெற விரும்பும் இலங்கையர்களுக்குச் சரியான வழிகாட்டுதல்களை வழங்கவும், அவர்கள் மோசடிக்காரர்களிடம் சிக்காமல் பாதுகாக்கவும் தூதரகம் எப்போதும் தயாராக உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
எனவே, லித்துவேனியா தொடர்பான எந்தவொரு தகவல்களையும் உறுதிப்படுத்திக்கொள்ளத் தூதரகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.lithuanianconsulate.lk அல்லது அவர்களது உத்தியோகபூர்வ சமூக ஊடகப் பக்கங்களைப் பின்பற்றுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள். மேலதிக விபரங்கள் அல்லது தெளிவுபடுத்தல்கள் தேவைப்படின், தூதரகத்தின் உத்தியோகபூர்வ தொலைபேசி எண்கள் அல்லது மின்னஞ்சல் முகவரிகள் ஊடாக மாத்திரமே தொடர்புகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வெளிநாடு செல்வதற்குச் சட்டரீதியான பாதைகளை மாத்திரமே பயன்படுத்துவது உங்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தும்.




