நியூ யங்ஸ்–புளூ ஈகல்ஸ் மோதிய ஆரம்ப போட்டி சமநிலையில் முடிவு

1 Min Read

இலங்கையின் முன்னணி கால்பந்து கழகங்களுக்கு இடையிலான பிரதான தொழில்முறை கால்பந்து தொடரான சுப்பர் லீக் தொடரை ஆரம்பித்து நடைபெற்று நியூ யங்ஸ் மற்றும் புளூ ஈகல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி 1–1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவுற்றது.

கொழும்பு, சுகததாச அரங்கில் நேற்று முன்தினம் கோலாகலமாக ஆரம்பமாக இந்தத் தொடரில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ளன. ஆரம்ப நிகழ்வில் விளையாட்டுத் துறை பிரதி அமைச்சர் சுகத் திலகரத்ன பிரதம அதிதிகயாக கலந்து கொண்டதோடு இலங்கை கால்பந்து சம்மேளன தலைவர் ஜஸ்வர் உமரும் பங்கேற்றார்.

இந்தத் தொடரை ஆரம்பித்து நடைபெற்ற முதல் போட்டியின் முதல் பாதி ஆட்டம் கோலின்றி முடிவுற்றது.

எனினும் இரண்டாவது பாதியில் புளூ ஈகல்ஸ் கால்பந்து கழகத்திற்காக ருமேஷ் மெண்டிஸ் 49 ஆவது நிமிடத்தில் கோல் புகுத்தினார்.

எனினும் புளூ ஈகல்ஸின் முன்னிலை நீண்ட நேரம் நிலைக்கவில்லை. 73 ஆவது நிமிடத்தில் உதார தேஷான், நியூ யங்ஸ் சார்பில் பதில் கோலை திருப்பினார். இதனை அடுத்து இரு அணிகளினதும் வெற்றி கோல் முயற்சிகள் வெற்றி அளிக்காத நிலையில் போட்டி சமநிலையில் முடிவுற்றது. கடந்த ஜூலை 4 ஆம் திகதி ஆரம்பமாகவிருந்த இந்தப் போட்டிகள் சில அணிகள் தயாராவதற்கு அவகாசம் அளித்து ஒரு வாரம் கடந்து ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதன் அனைத்துப் போட்டிகளும் சுகததாச அரங்கில் மாலை 3.30 இற்கு ஆரம்பமாகும்.

இரட்டை ரவுன்ட் ரொபின் சுற்று அடிப்படையில் நடைபெறவுள்ள இந்தத் தொடரில் ஓர் அணி மற்ற அணியுடன் தலா இரு முறை மோதவிருப்பதோடு எதிர்வரும் நவம்பர் மாதம் வரை நடைபெறவுள்ள இந்தப் போட்டியில் மொத்தம் 90 ஆட்டங்கள் இடம்பெறவுள்ளன.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *