ஈரான் மீது இரண்டாவது நாளாகவும் அமெரிக்கா உக்கிர தாக்குதல்களை நடத்தியதை அடுத்து ஈரான் பதிலடியாக பஹ்ரைன், குவைட் மற்றும் கட்டார் மீது ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதலை நடத்தி இருக்கும் நிலையில் மீண்டும் முழு அளவில் போர் வெடிக்கும் அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது.
ஈரானுடன் செய்துகொண்ட புரிந்துணர்வு உடன்படிக்கை முடிவுக்கு வந்ததாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் குறிப்பிட்ட நிலையிலேயே அமெரிக்கா மீண்டும் தாக்குதலை நடத்தியுள்ளது. ஹோர்முஸ் நீரிணையில் கடந்த செவ்வாயன்று மூன்று சரக்குக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாகவே ஈரானை தாக்கியதாக அமெரிக்கா கூறியது.
‘ஹோர்முஸ் நீரிணையில் சுதந்திரமான கப்பல் போக்குவரத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் ஈரானின் திறனை மேலும் குறைக்கும் நோக்கில், அமெரிக்க மத்திய கட்டளைப் படைகள் ஈரான் மீது கூடுதல் தாக்குதல்களை நடத்தின’ என்று மத்திய கிழக்கு பிராந்தியத்திற்கான அமெரிக்க இராணுவ கட்டளையகம் எக்ஸ் சமூகதளத்தில் பதிவிட்டுள்ளது.
ஹோர்முஸ் நீரிணையில் உள்ள துறைமுக நகரங்களான சிரிக் மற்றும் பண்டர் அப்பாஸ் உள்ளிட்ட ஈரானின் தென்பகுதிகளில் குண்டுவெடிப்புகள் நடந்துள்ளதாக, ஈரானிய அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஐந்து மாகாணங்களில் அமெரிக்க தாக்குதல்கள் நடந்திருப்பதாகவும் குறைந்தது 14 பேர் கொல்லப்பட்டு மேலும் 78 பேர் காயமடைந்திருப்பதாகவும் ஈரான் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்தச் சமீபத்திய தாக்குதல்களுக்குப் பின்னர், டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் இதுகுறித்துப் பதிவிட்டுள்ளார். அதில், ‘ஈரான் நேற்று கப்பல்கள் மீது நடத்திய குண்டுவீச்சுக்கு பழிவாங்கும் நடவடிக்கை இது. மீண்டும் இது நடந்தால், நிலைமை இன்னும் மோசமாகும்’ என்று கூறியுள்ளார்.
ஈரான் மீதான தனது தொடர் இரண்டாவது இரவு தாக்குதல்களில் ஈரான் முழுவதும் தோராயமாக 90 இலக்குகளை தாக்கியுள்ளதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் இந்தத் தாக்குதல்களைத் தொடர்ந்து ஈரான் நடத்திய தாக்குதல்கள் குறித்து வளைகுடா நாடுகள் தெரிவித்துள்ளன. அதன்படி, பஹ்ரைனின் தலைநகர் மனாமாவில் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்துள்ளன, குவைட் ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்களை இடைமறித்து அழித்துள்ளது, மற்றும் கட்டார் பாதுகாப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது.
அமெரிக்காவுடனான ஈரானின் தலைமைப் பேச்சுவார்த்தையாளராக இருக்கும் ஈரானிய பாராளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப், ‘அச்சுறுத்துவதும், வாக்குறுதிகளை மீறுவதும் இனி இலவசமானவை அல்ல என்பதை அமெரிக்கா இன்னும் கற்றுக்கொள்ளவில்லை’ என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
‘நான் இதைத் தெளிவாகச் சொல்கிறேன். நீங்கள் தாக்கினால், நீங்களும் தாக்கப்படுவீர்கள்’ என்று அப்பதிவில் எழுதியுள்ள அவர், ஹோர்முஸ் நீரிணையானது ஈரானின் ஏற்பாடுகளின் கீழ் மட்டுமே திறக்கப்படும். ‘அமெரிக்க அச்சுறுத்தல்களுக்கு’ கட்டுப்பட்டு அல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார்.
போருக்கு முன்னர் உலகளாவிய எண்ணெய் விநியோகத்தின் ஐந்தில் ஒரு பங்கு கடந்து சென்ற இந்த நீரிணையின் (ஹோர்முஸ் நீரிணை) கட்டுப்பாடு, ஈரானுக்கு மிகப்பெரிய செல்வாக்கை வழங்கியுள்ளது. இதன் மூலம் உலகின் மிகவும் சக்திவாய்ந்த இராணுவத்துடன் கூட ஒரு இழுபறி நிலையை உருவாக்கும் அளவுக்கு ஈரான் தனது நிலையை வலுப்படுத்தியுள்ளது.
கப்பல்கள் மீதான தாக்குதல்களுக்கு ஈரான் பொறுப்பேற்கவில்லை என்றாலும், பேச்சுவார்த்தைகளில் தனது செல்வாக்கை அதிகரிப்பதற்காக இதுபோன்ற நடவடிக்கைகளை ஈரான் பயன்படுத்தி வருவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதலுடன் ஆரம்பித்த ஈரானுக்கு எதிரான போரை முடிவுக்கக் கொண்டுவர கடந்த ஜூன் 17 ஆம் திகதி புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்று எட்டப்பட்டது. இறுதி உடன்படிக்கை ஒன்றை எட்டுவதற்காக அமெரிக்கா மற்றும் ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வரும் நிலையிலேயே பரஸ்பர தாக்குதல்கள் தீவிரம் அடைந்துள்ளன.
இந்நிலையில் இந்த புரிந்துணர்வு உடன்படிக்கை முடிவுக்கு வந்ததாக டிரம்ப் நேற்று முன்தினம் அங்காராவில் நடந்த நேட்டோ மாநாட்டின்போது குறிப்பிட்டாலும் அது பற்றி தெளிவான அறிவிப்புகள் வெளியாகவில்லை.
டிரம்ப் இதற்கு முன்னரும் இராணுவ நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படுவதாக அடிக்கடி எச்சரித்தபோதும் அதில் இருந்து பின்வாங்கி, முழுமையான போரை ஆரம்பிப்பதற்கு எதிரான கருத்துகளை வெளியிட்டுள்ளார். கடந்த புதனன்று கூட இந்தப் போர் மீண்டும் ஆரம்பிக்கும் என்று தான் நினைக்கவில்லை என்று டிரம்ப் குறிப்பிட்டிருந்தார்.
‘எது நடந்தாலும் அது மிக விரைவாக முடிவுக்கு வரும்… மேலும் அது எண்ணெய் விநியோகம் உட்பட அனைத்தையும் மேலும் பாதுகாப்பானதாக மாற்றும்’ என்று அவர் தெரிவித்தார்.
கடந்த புதனன்று மீண்டும் வெடித்த பரஸ்பர தாக்குதல்களை அடுத்து பிரெண்ட் ரக மசகு எண்ணெய் மேலும் ஒரு வீதத்தால் அதிகரித்து பீப்பாய் ஒன்று 78.80 டொலர்களாக உயர்ந்துள்ளது. எனினும் கடந்த ஏப்ரலில் பீப்பாய் ஒன்று 120 டொலர்களாக உச்சத்தைத் தொட்ட நிலையில் இந்த விலை ஒப்பீட்டளவில் மிகக் குறைவாகவே உள்ளது.
இந்தப் போரை ஆரம்பித்து முதல் நாளில் இடம்பெற்ற தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட ஈரான் உயர்பட்ட தலைவர் ஆயதொல்லா அலி கமெனேயின் இறுதிச் சடங்குக்கு மத்தியிலேயே மோதல்களும் தீவிரம் அடைந்துள்ளன. கடந்த ஆறு நாட்களில் ஐந்து நகரங்களுக்கு எடுத்துச் செய்யப்பட்ட உயர்மட்டத் தலைவரின் உடல் நேற்று (09) அவரது சொந்த ஊடரான மஷ்ஹத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
குறிப்பாக உயர்மட்டத் தலைவரின் உடலை கடந்த புதனன்னு ஈராக்கின் புனித நகரங்களான நஜாப் மற்றும் கர்பலாவுக்கு எடுத்துச்சென்றபோது அங்கு மில்லியன் கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக திரண்ட நிலையில் இறுதிக் கிரியையில் தாமதம் ஏற்பட்டது.
மறுபுறம் இஸ்ரேல் தெற்கு லெபனான் மற்றும் காசாவில் தாக்குதல்களை நடத்தி வருவதோடு புதிய தாக்குதல்களில் பலஸ்தீனில் குறைந்தது எட்டுப் பேர் கொல்லப்பட்டிருப்பதோடு லெபனானில் மேலும இருவர் பலியானதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.




