சாட்சியங்களை அழிக்கும் இலக்கு வைத்தே சிறைச்சாலை தாக்குதல்

3 Min Read

அரசுக்கு தகவல் வழங்கியவர் மீதே முதல் தாக்குதல்

முழுமையான விசாரணைகளும் முன்னெடுப்பு

நீதியமைச்சர் ஹர்ஷண சபையில் விளக்கம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில்,பாதாளக்குழுவுக்கும் போதைப்பொருள் தரப்பினருக்குமிடையில் ஏற்பட்ட மோதல்கள், திட்டமிட்ட செயற்பாடுகள் என்றும் போதைப்பொருள் தொடர்பில் பாதுகாப்பு தரப்புக்கு தகவல் வழங்கிய சந்தேக நபரே, முதலில் தாக்கப்பட்டதாகவும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

மோதலின் போது சிறைச்சாலைக்குள் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கெமராக்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளதுடன் போதைப்பொருள் தொடர்பில் ஆராயும் ஸ்கேன் இயந்திரமும் உடைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் சம்பவங்கள் தொடர்பில் விசேட உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது;

நீர்கொழும்பு சிறைச்சாலையில் பாதாளக் குழுக்களுக்கும், போதைப்பொருள் தரப்பினருக்கும் இடையில்தான், மோதல்கள் ஏற்பட்டன.இச்சம்பவங்கள் மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள் மிகவும் துரதிஷ்டவசமானவை. இந்த சம்பவத்தில் உயிரிழந்த 7 சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் மற்றும் 19 சிறைக் கைதிகளின் குடும்பத்தினர், உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் காயமடைந்த 23 சிறைச்சாலை உத்தியோகத்தர்களும், 54 சிறைக்கைதிகளும் சிகிச்சைகளுக்காக கொழும்பு உட்பட பல்வேறு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.

சிறைக்குச் சென்றுள்ள தமது மகன் சவப்பெட்டிக்குள்ளிருந்து வெளியில் வருவார் என்று எந்த தாயும் எதிர்பார்ப்பதில்லை. சிறைச்சாலைக்கு கடமைக்குச் சென்ற தமது கணவர் மற்றும் பிள்ளைகள் பிணமாக வருவரென்று எவரது உறவுளும் எதிர்பார்ப்பதில்லை. ஆனால் துரதிஷ்டவசமாக இது நடந்து விட்டது. தற்போதைய இக்கட்டான நிலையில் கைதிகளினதும், சிறைச்சாலை உத்தியோகத்தர்களின் உறவுகள் வெளிப்படுத்தும் ஆற்றாமை மற்றும் அவர்களின் துயரத்தை அரசாங்கம் என்ற ரீதியில் முழுமையாக உணர்கிறோம். இதனை நாம் பொறுப்பேற்கிறோம்.இந்த சம்பவத்தை நாம் ஒருபோதும் குறைத்து மதிப்பிடமில்லை. அலட்சியப்படுத்தவுமில்லை.தற்போதைய நிலையில் அதிலிருந்து நாம் பாடம் கற்றுக்கொண்டு எதிர்காலத்தில் இவ்வாறான நிலைமை ஏற்படாத வகையில், உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

மேற்படி சிறைச்சாலை மோதல் சம்பவங்கள் தொடர்பில் முழுமையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நீதியரசர் பிரியந்த பெர்னாண்டோ தலைமையில் விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது. சிறைச்சாலைத் திணைக்களமும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடுகளை தாக்கல் செய்துள்ளன.

அமைச்சு மட்டத்தில் சிறைச்சாலை அதிகாரிகளுடன் விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளோம். அதற்கிணங்க ஏனைய சிறைச்சாலைகளில் இவ்வாறான நிலை இனியும் ஏற்படாத வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த 05 ஆம் திகதி சிறைச்சாலைக்குள் கைதிகளுக்கிடையில் மோதல்கள் ஏற்பட்டுள்ளன. இதன்போது 35 பேர் காயமடைந்த நிலையில் கைதிகள் இருவர் உயிரிழந்துள்ளனர்.கைதிகளுக்கும், சிறைச்சாலை உத்தியோகத்தர்களுக்கும் இடையில் மோதல் ஏற்படவில்லை.இந்த மோதல் நிலைமை கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் திங்கட்கிழமை மீண்டும் சிறைச்சாலையில் பதற்றம் ஏற்பட்டது.

மோதலின் போது சிறைச்சாலைக்குள் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கெமராக்கள் முதலில் உடைக்கப்பட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து போதைப்பொருள் தொடர்பில் ஆராயும் ஸ்கேன் இயந்திரம் சேதப்படுத்தப்பட்டுள்ளது.இவை திட்டமிட்ட செயற்பாடுகளாகும். இரண்டு சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் மீது சிறைக்கைதிகள் தாக்குதல் நடத்தியுள்ளார்கள். அவர்களை பாதுகாப்பதற்காக சென்ற போதே ஏனைய உத்தியோகத்தர்கள் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்கள். மோதலில் ஈடுபட்ட கைதிகள் இரும்புக் கதவை உடைத்துக் கொண்டு வெளியில் வந்துள்ளார்கள்.கைதிகளின் கைகளுக்கு எவ்வாறு துப்பாக்கிகள் சென்றுள்ளன என்பது தொடர்பில் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

தமது சுய பாதுகாப்பு மற்றும் பொதுவான பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகவே பாதுகாப்புத் தரப்பினர் துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுள்ளார்கள். இவ்வாறான பின்னணியில் தற்போது 734 கைதிகள் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளார்கள்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *