சுங்கத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள புனித அல்குர்ஆன் பிரதிகளை விடுவிப்பது தொடர்பில் விரைவில் சிறந்த முடிவு கிடைக்குமென, பிரதியமைச்சர் முனீர் முழப்பர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். சம்பந்தப்பட்ட மீளாய்வுக் குழுவின் கடிதம் பாதுகாப்பு தரப்பினருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதால், விரைவில் சிறந்த முடிவு கிடைக்கும் என நம்புவதாகவும் பிரதியமைச்சர் சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் எம்.பி மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன் எம்பி ஆகியோர் சபையில் உரையாற்றுகையில், இரண்டு வருடங்களுக்கும் அதிக காலம் சுங்கத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அல்குர்ஆன் பிரதிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.மீளாய்வுக் குழு அனுமதித்தால் அல்குர்ஆன் பிரதிகளை விடுவிக்க முடியும் என அரசாங்க தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டு வந்தது.எனவே தொடர்ந்தும் தாமதிக்காமல் தடுத்துவைக்கப்பட்டுள்ள அல்குர்ஆன் பிரதிகளை விடுவிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டனர். இக்கோரிக்கைகளுக்கு தொடர்ந்தும் பதிலளித்த பிரதியமைச்சர்; சுங்கத்தில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் புனித அல்குர் ஆன் பிரதிகள் தொடர்பில் மீளாய்வு குழுவினர், தங்களின் நிலைப்பாட்டை தெரிவித்து, எமக்கு கடிதம் அனுப்பியிருந்தார்கள். குறித்த கடிதத்தை நாம் பாதுகாப்புத் தரப்பினருக்கு அனுப்பி வைத்துள்ளோம். இது தொடர்பான கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றிருக்கின்றது. அதனால் தடுத்துவைக்கப்பட்டுள்ள புனித அல்குர் ஆன் பிரதிகள் தொடர்பில் ஒரு நல்ல முடிவு விரைவில் கிடைக்கும்.அது தொடர்பான விடயங்களை முஸ்லிம் சமய மற்றும் கலாசார விவகாரங்கள் திணைக்களப் பணிப்பாளர் மேற்கொண்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.




