பிரேசிலை வெளியேற்றிய நோர்வே காலிறுதியில் இங்கிலாந்துடன் மோதல்

2 Min Read

எர்லிங் ஹாலண்டின் இரட்டை கோல் மூலம் பிரேஸில் அணியை 2–1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய நோர்வே அணி பிஃபா உலகக் கிண்ண காலிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்கொள்ளவுள்ளது. இங்கிலாந்து தனது 16 அணிகள் சுற்றில் மெக்சிகோவுக்கு எதிராக 3–2 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றியீட்டியது.

நியூ ஜேர்சியில் இலங்கை நேரப்படி நேற்று நடைபெற்ற போட்டியில் ஐந்து முறை உலகக் கிண்ணத்தை வென்ற பிரேசிலுக்கு எதிராக நோர்வே வலுவான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. எனினும் போட்டியின் கடைசி நிமிடங்கள் வரை இரு அணிகளும் கோல்பெறத் தவறின.

நான்காவது நிமிடத்தில் நோர்வேக்காக பட்ரிக் பேர்க் பந்தை வலைக்குள் புகுத்தினாலும் அது ஓஃப் சைட் ஆக இருந்தது. முதல் பாதியின் ஆரம்பத்திலேயே பிரேசிலின் புரூனோ குயிமராஸுக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பு தவறவிடப்பட்டது. எனினும் கடைசி 11 நிமிடங்களில் நட்சத்திர வீரர் ஹாலண்ட் அடுத்தடுத்து பெற்ற இரண்டை கோல்கள் நோர்வேயின் வெற்றியை உறுதி செய்தது.

போட்டி முடியும் நேரத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பு மூலம் நெய்மார் பிரேஸிலுக்காக ஆறுதல் கோல் ஒன்றை பெற்றார். 1990 இற்கு பின்னர் பிரேசில் அணி உலகக் கிண்ண காலிறுதிக்கு முன்னேறாமல் வெளியேறுவது இதுவே முதல் முறையாகும்.

இதேவேளை போட்டியை நடத்தும் நாடுகளில் ஒன்றான மெக்சிகோவை தனது சொந்த மண்ணில் எதிர்கொண்ட இங்கிலாந்து ஜூட் பெலலிங்கமின் இரட்டை கோல்கள் மூலம் முதல் பாதியில் 2–1 என முன்னிலை பெற்றாலும் ஆட்டத்தின் பரபரப்பு கடைசி வரை நீடித்தது. குறிப்பாக 54 ஆவது நிமித்தில் மத்திய பின்கள வீரர் ஜரல் குவான்ஷா சிவப்பு அட்டை பெற்றால் இங்கிலாந்து 10 வீரர்களுடன் ஆட வேண்டி ஏற்பட்டது.

இந்நிலையில் பெனால்டி வாய்ப்பைப் பெற்று இங்கிலாந்து அணித் தலைவர் ஹரி கேன் 60 நிமிடத்தில் கோல் ஒன்றை புகுத்தினார். மெக்சிகோவும் 69ஆவது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பை கோலாக மாற்றியது. எவ்வாறாயினும் போட்டி முடியும் வரை இங்கிலாந்து தனது முன்னிலையை தக்கவைத்துக் கொண்டது.இதன்படி காலிறுதிக்கு முன்னேறி இருக்கும் இங்கிலாந்து மற்றும் நோர்வே அணிகள் அரையிறுதிக்காக பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இந்த இரு அணிகளுக்கும் இடையிலான காலிறுதிப் போட்டி எதிர்வரும் ஜூலை 12 ஆம் திகதி இலங்கை நேரப்படி அதிகாலை 2.30 இற்கு மியாமியில் நடைபெறவுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *