டெங்கு அதி அபாய வலயங்களாக 142 சுகாதார அதிகாரிகள் பிரிவுகள்

2 Min Read

நாட்டில் இந்த வருடத்தின் நேற்று வரையான காலப்பகுதியில்  டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 61,060 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. புதிய தரவுகளின்படி, நாடு முழுவதிலுமுள்ள 142 சுகாதார மருத்துவ அதிகாரிகள் பிரிவுகள் டெங்கு அதி அபாய வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

அதேவேளை, கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 2,604 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் அந்தப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதிவேகமாக டெங்கு பரவும் பொது சுகாதார அதிகாரிகள் பிரிவை இலக்காகக் கொண்டு நேற்று முன் தினம் முதல் மீண்டும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரப் படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன் மேல் மாகாணத்திலுள்ள பல வைத்தியசாலைகளில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அவற்றின் உச்ச கொள்ளளவை எட்டியுள்ள நிலையில் நோயாளர்களின் எண்ணிக்கை அதிவேகமாக அதிகரித்து வருவதால்  அவர்களைப் பராமரிக்கும் நடவடிக்கைகள் கடுமையான அசௌகரியத்திற்கும் அபாயத்திற்கும் உள்ளாகியுள்ளதாக அதன் பதில் பணிப்பாளர் விசேட மருத்துவர் கபில கன்னங்கர குறிப்பிட்டுள்ளார்.

டெங்கு நோய் பரவல் அதிகரித்து வரும் நிலையில் மொத்த நோயாளர்களில் அதிகளவானோர், குறிப்பாக 52.50 சதவீதமானோர் மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளனர். நேற்றைய நிலவரப்படி மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ள மொத்த நோயாளர்களின் எண்ணிக்கை 32,054 ஆகும். அதேபோன்று தென் மாகாணத்தில் 9,674 நோயாளர்களும், சப்ரகமுவ மாகாணத்தில் 5,237 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர். மத்திய மாகாணத்தில் 4,823 நோயாளர்களும், கிழக்கு மாகாணத்தில் 2,979 நோயாளர்களும், வடமேல் மாகாணத்தில் 2,778 நோயாளர்களும்  ஊவா மாகாணத்தில் 1,550 நோயாளர்களும், வடமத்திய மாகாணத்தில் 1,013 நோயாளர்களும், வட மாகாணத்தில் 957 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர். மாவட்ட மட்டத்தில் அதிகளவான நோயாளர்கள் கொழும்பு மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளனர். அந்த எண்ணிக்கை 12,445 ஆகும். அதேபோன்று கம்பஹா மாவட்டத்தில் 12,282 நோயாளர்களும், மாத்தறை மாவட்டத்தில் 4,428 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர். களுத்துறை மாவட்டத்தில் 4,092 நோயாளர்களும், கண்டி மாவட்டத்தில் 3,802 நோயாளர்களும், இரத்தினபுரி மாவட்டத்தில் 3,588 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.  காலி மாவட்டத்தில் 3,501 நோயாளர்களும், கொழும்பு மாநகர சபை நிர்வாகப் பிரதேசத்தில் 2,557 நோயாளர்களும், அம்பாந்தோட்டையில் 1,745 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர். டெங்கு நோயாளர்களின் அதிகரிப்பு மிகவும் பாரதூரமான மட்டத்தை எட்டியுள்ளதாலும், பெருமளவிலான வைத்தியசாலைகள்  உச்சக் கொள்ளளவை எட்டி வைத்தியசாலைத் தொகுதிக்குக் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாலும், இந்த நேரத்தில் குறுகிய கால அவசர நடவடிக்கைகளைச் செயல்படுத்துவதற்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *