நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்று (06) ஏற்பட்ட மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது.
UPDATE: நீர்கொழும்பு சிறை கைதிகளை உடனடியாக வேறு சிறைக்கு மாற்ற பொலிஸார் நடவடிக்கை (2.41p.m)
நீர்கொழும்பு சிறைச்சாலையில் உள்ள கைதிகள் சிலரை உடனடியாக வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றுவதற்குச் சிறைச்சாலை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதாக, சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும் சிறைச்சாலைகள் ஆணையாளருமான ஏ.சி. கஜநாயக்க தெரிவித்துள்ளார்.
UPDATE: நீர்கொழும்பு சிறையில் பாதாள குழு – போதைப்பொருள் கடத்தல்காரர் மோதல்: உயிரிழப்பு 21ஆக அதிகரிப்பு (1.31p.m)
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்று (06) ஏற்பட்ட மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.
UPDATE: நீர்கொழும்பு சிறை பதற்றம்; மரண எண்ணிக்கை 19ஆக உயர்வு (12.49 p.m)
நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறைச் சம்பவங்களில் சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட இதுவரை 19 பேர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
UPDATE: நீர்கொழும்பு சிறை பதற்றம்; பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு (12.15pm)
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்று (06) காலை ஏற்பட்ட மோதலில் சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
UPDATE: நீர்கொழும்பு சிறை பதற்றம்; 3 சிறை அதிகாரிகள் உள்ளிட்ட 5 பேர் உயிரிழப்பு (11.43 a.m)
நீர்கொழும்பு சிறைச்சாலைக்குள் இன்று (06) முற்பகல் மீண்டும் ஏற்பட்ட பதற்ற நிலை காரணமாகக் காயமடைந்தவர்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
அவர்களில் மூவர் பாதுகாப்பு அதிகாரிகள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
Update : நீர்கொழும்பு சிறைச்சாலையில் நேற்று (05) மதியம் கைதிகளுக்கிடையே வெடித்த மோதல், இன்று (06) மீண்டும் தீவிரமடைந்ததையடுத்து அங்கு மிகவும் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. (10.45 a.m)
நேற்றைய மோதலில் இருவர் உயிரிழந்த நிலையில், இன்று ஏற்பட்ட தொடர் மோதல்களில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களில் மேலும் மூவர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் இருவர் சிறைச்சாலை அதிகாரிகள் என தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, இந்த வன்முறைச் சம்பவங்களில் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளது.
நேற்று மதியம் 1.00 மணியளவில் விளக்கமறியல் கைதிகள் குழுவிற்கும், தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் குழுவிற்கும் இடையே ஏற்பட்ட முறுகல் நிலையே இந்த வன்முறைக்கு முதற்காரணமாக அமைந்தது.
நேற்றைய மோதலில் 38 பேர் காயமடைந்திருந்த நிலையில், இன்று காலை மீண்டும் மோதல் மூண்டதால் மேலதிகமாக 35 கைதிகள் காயமடைந்து நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று மாலை அதிகாரிகளால் ஓரளவு கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டிருந்த சிறைச்சாலையின் சூழல், இன்று மீண்டும் சீர்குலைந்தது.
தற்போது சிறைச்சாலை வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதோடு, மேலதிக படையினர் வரவழைக்கப்பட்டு வன்முறையைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.




