இவ்வாரம் (30) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் 15 தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன:
1. பஸ் கட்டணங்களை ஜூலை 01 முதல் திருத்தம் செய்ய அனுமதி
– எரிபொருள் விலை மாற்றம், டொலர் வீழ்ச்சியை கருத்திற்கொண்டு போக்குவரத்து ஆணைக்குழு முடிவு
எரிபொருள் விலை மாற்றம் மற்றும் பஸ் உதிரிப்பாகங்களின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைக் கருத்திற்கொண்டு, தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பரிந்துரைக்கமைய பஸ் கட்டணங்களைத் திருத்தம் செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
026 ஆம் ஆண்டு பெப்ரவரி முதல் நிலவும் எரிபொருள் விலை ஏற்ற இறக்கங்கள் மற்றும் புதிய மெட்ரோ டிரான்ஸிட் பஸ்களின் இயக்கச் செலவுகள் என்பன இதில் கருத்திற்கொள்ளப்பட்டுள்ளன.
2. ஹொரண மாவட்ட பொது வைத்தியசாலை மத்திய அரசாங்கத்தின் கீழ்
– மூன்றாம் நிலை சிகிச்சை வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் சுகாதார அமைச்சுடன் இணைப்பு
தற்போது மேல் மாகாண சபையின் கீழ் நிர்வகிக்கப்பட்டு வரும் ஹொரண மாவட்ட பொது வைத்தியசாலையை, நவீன மருத்துவ வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் சுகாதார அமைச்சுடன் இணைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சுமார் 544 நோயாளர் கட்டில்களைக் கொண்ட இந்த வைத்தியசாலை மூலம் களுத்துறை, கொழும்பு மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 10 இலட்சம் மக்களுக்கு மேம்பட்ட சுகாதார சேவைகளை வழங்க எதிர்பார்க்கப்படுகிறது.
3. 8.3 இலட்சம் மாணவர்களுக்கு ரூ. 3,000 வவுச்சர்கள்
– 2027ஆம் ஆண்டில் பாடசாலை மாணவர்களுக்கு பாதணி வழங்க திட்டம்
அரசு பாடசாலைகள் மற்றும் பிரிவேனாக்களில் கல்வி பயிலும் 836,571 மாணவர்களுக்கு ஒரு ஜோடி பாதணியை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்காகத் தெரிவு செய்யப்பட்ட மாவட்டங்களின் சந்தை நிலவரத்திற்கேற்ப, உள்ளூர் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் தலா 3,000 ரூபா பெறுமதியான வவுச்சர்கள் வழங்கப்படும்.
4. இலங்கை வங்கிக்கு 10 மில்லியன் டொலரில் புதிய கணனி கட்டமைப்பு
– 22 வருட கால பழைய முறையை மாற்றி நவீன ‘Core Banking System’
இலங்கை வங்கியின் செயல்பாடுகளை நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்ப மேம்படுத்த, 10 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் புதிய ‘Core Banking System’ ஒன்றை நிறுவத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
22 ஆண்டுகளாகப் பயன்பாட்டில் உள்ள தற்போதைய அமைப்பு நவீன வங்கித் தேவைகளைப் பூர்த்தி செய்யப் போதுமானதாக இல்லை எனக் கண்டறியப்பட்டுள்ளது.
5. 175 உழவு இயந்திரங்கள் உட்பட 535 வாகனங்கள் கொள்வனவு
– அரச அபிவிருத்திப் பணிகளுக்கு புதிய வாகனங்கள்
அரச அபிவிருத்தி மற்றும் களப்பணிகளை வினைத்திறனாக முன்னெடுக்க வாகனக் கொள்முதல் பணிகளை ஆரம்பிக்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
இதன்படி 175 உழவு இயந்திரங்கள், 100 கழிவுநீர் பவுசர்கள், 100 பெக்கோ இயந்திரங்கள் மற்றும் 160 டிப்பர் ஊர்திகள் கொள்வனவு செய்யப்படவுள்ளன.
6. ரூ. 515 பில்லியன் செலவில் ‘டிட்வா’ சூறாவளி புனரமைப்புத் திட்டங்கள்
– 1,028 தேசிய திட்டங்களை சிறப்பாகக் கட்டியெழுப்புதல் கொள்கையின் கீழ் அமுல்
டிட்வா சூறாவளியால் சேதமடைந்த பொது வசதிகளைச் சீரமைக்க 1,028 தேசிய திட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இதற்காக மொத்தம் 515,460.26 மில்லியன் ரூபா மதிப்பீட்டில் புனரமைப்புப் பணிகளை முன்னெடுக்க அனுமதி கிடைத்துள்ளதுடன், மாகாண சபைகளின் 38 திட்டங்களுக்காக மேலதிகமாக 102,219.05 மில்லியன் ரூபா ஒதுக்கப்படும்.
7. 2026/27 பெரும்போகத்திற்காக 20,000 மெட்ரிக் தொன் யூரியா கொள்வனவு
– விவசாயிகளுக்குத் தடையின்றி உரம் வழங்க சர்வதேச போட்டி விலைமனு கோரல்
எதிர்வரும் பெரும்போக நெற்செய்கைக்காக 10,000 மெட்ரிக் தொன் பீல்ட் யூரியா மற்றும் 10,000 மெட்ரிக் தொன் கிரானியுலா யூரியா உரங்களைச் சர்வதேச போட்டி விலைமனு கோரல் ஊடாகக் கொள்வனவு செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மொத்தமாக 8 இலட்சம் ஹெக்டேர் பயிர்ச் செய்கைக்குத் தேவையான உரத்தின் ஒரு பகுதியாக இது அமையும்.
8. குருணாகல் – கலேவெல 38.5 கி.மீ. தூர பாதை உள்நாட்டு நிதி மூலம் நிர்மாணம்
– மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் 4 ஆம் கட்ட பணிகள் ஆரம்பம்
மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் குருணாகல் முதல் தம்புள்ளை வரையான 4 ஆம் பகுதியின் கீழ், முதற்கட்டமாக குருணாகல் முதல் கலேவெல வரையான 38.5 கி.மீ தூரத்தை இலங்கை அரசாங்கத்தின் நிதியைப் பயன்படுத்தி உள்நாட்டு ஒப்பந்தக்காரர்கள் மூலம் நிர்மாணிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
9. யாழ் மாநகர சபை கட்டடத்தை நிறைவு செய்ய ரூ. 1,958 மில்
– பொருளாதார நெருக்கடியால் இடைநிறுத்தப்பட்டிருந்த இரண்டாம் கட்டப் பணிகளைத் தொடர அங்கீகாரம்
2022 இல் நிலவிய பொருளாதார நெருக்கடியால் இடைநிறுத்தப்பட்டிருந்த யாழ்ப்பாண மாநகர சபைக் கட்டிடத்தின் இரண்டாம் கட்டப் பணிகளைப் பூர்த்தி செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்காக ரூ. 1,958.85 மில்லியன் (வரி நீங்கலாக) செலவில் மத்திய பொறியியல் சேவைகள் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.
10. கண்டி தேசிய வைத்தியசாலையில் புதிய பிரிவுகள்
– ரூ. 1,094 மில்லியன் செலவில் 68 நோயாளர் கட்டில்கள் கொண்ட வார்டுகள்
கண்டி தேசிய வைத்தியசாலையில் அமைக்கப்பட்டு வரும் கட்டிடத்தில் 68 நோயாளர் கட்டில்கள் கொண்ட புதிய வார்டுகளை நிர்மாணிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சாக் (SAARC) நிதியுதவியுடன் முன்னெடுக்கப்படும் இத்திட்டத்தின் மொத்த மதிப்பீடு 1,094.22 மில்லியன் ரூபாவாக திருத்தப்பட்டுள்ளதுடன், 2027 இறுதிக்குள் பணிகளை முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
11. நாய்க்கடி பாதிப்பைக் குறைக்கவும் செல்லப் பிராணிகளை பதியவும் புதிய சட்டம்
– ரேபிஸ் ஒழிப்பு மற்றும் செல்லப் பிராணிகள் தொடர்பில் புதிய சட்டமூலம்
இலங்கையில் ரேபிஸ் (வெறிநாய்க்கடி) நோயை ஒழிக்கவும் செல்லப் பிராணிகளைப் பதிவு செய்வதை முறைப்படுத்தவும் புதிய சட்டமூலத்தைத் தயாரிக்கும் இறுதி வரைபுக்கு அனுமதி கிடைத்துள்ளது.
இது விரைவில் வர்த்தமானியில் வெளியிடப்பட்டு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
12. வளிமண்டலவியல் திணைக்களத்திற்கு புதிய பணிப்பாளர் நாயகம்
– சிரேஷ்ட அதிகாரி ஏ.எல்.கே. விஜேமான்ன நியமனம்
வளிமண்டலவியல் திணைக்களத்தின் வெற்றிடமாக உள்ள பணிப்பாளர் நாயகம் பதவிக்கு அந்த திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரியான ஏ.எல்.கே. விஜேமான்னவை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
13. மத்திய வங்கியின் மேற்பார்வை நடவடிக்கைகள் டிஜிட்டல் மயமாக்கல்
– வங்கித் துறையின் உறுதிப்பாட்டைப் பேண நவீன தொழில்நுட்பத் தீர்வு அறிமுகம்
ஆசிய அபிவிருத்தி வங்கியின் தொழில்நுட்ப உதவியுடன், மத்திய வங்கியின் வங்கி மேற்பார்வைப் பிரிவின் செயல்பாடுகளை டிஜிட்டல் முறைக்கு மாற்றத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் வங்கிகளைக் கண்காணிக்கும் பணிகளின் வினைத்திறன் மற்றும் தரவு மேலாண்மை அதிகரிக்கப்படும்.
14. 2026 சிறுபோக நெல் கொள்வனவுக்கு ரூ. 6,000 மில்லியன் ஒதுக்கீடு
– விவசாயிகளிடமிருந்து நேரடியாக அரசாங்கம் நெல் கொள்வனவு
2026 சிறுபோகத்தில் விவசாயிகளிடமிருந்து நெல்லைக் கொள்வனவு செய்யும் திட்டத்தை முன்னெடுக்க ரூ. 6,000 மில்லியன் நிதியை ஒதுக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
15. இந்தியாவின் ‘சாகர் பந்து’ திட்டத்தின் கீழ் 450 மில்லியன் டொலர் உதவி
– சூறாவளி புனரமைப்புப் பணிகளுக்கு கடன் மற்றும் நன்கொடை அடிப்படையில் நிதி
‘டிட்வா’ சூறாவளிக்குப் பின்னரான புனரமைப்புப் பணிகளுக்காக இந்திய அரசாங்கம் 350 மில்லியன் டொலர் கடனாகவும், 100 மில்லியன் டொலர் நன்கொடையாகவும் மொத்தம் 450 மில்லியன் டொலர் நிதியுதவியை வழங்க முன்வந்துள்ளது.
இந்த நிதி சுகாதாரம், கல்வி, வீடமைப்பு மற்றும் நீர் வழங்கல் துறைகளில் பயன்படுத்தப்படும்




