அரசாங்கம் கைது மற்றும் விசாரணைகள் குறித்து தொடர்ந்து கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, நாட்டில் மோசமடைந்து வரும் வாழ்க்கைச் செலவுப் பிரச்சினைக்கு தீர்வு வழங்க வேண்டும் என பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கைது , விசாரணை மற்றும் நீதிமன்றத் தீர்ப்புகள் குறித்து பாராளுமன்றத்தில் கருத்து வெளியிடுவதை ஜனாதிபதி நிறுத்த வேண்டும். மக்கள் கேட்பது ஒன்றே ஒன்று தான், அது அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுக்கு அரசாங்கத்தின் தீர்வு என்ன? என்பதே எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
விசாரணைக்கு உட்படுத்த வேண்டிய வழக்குகள் இருந்தால், சட்டம் தனது வழியில் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்றும், அரசியல் கருத்துகளை வெளியிடத் தேவையில்லை என்றும் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
எந்த விசாரணையையும், எந்த சட்ட நடவடிக்கையையும் எதிர்கொள்ள நாங்கள் தயாராக உள்ளோம். நீதித்துறையின் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. எதிலிருந்தும் நாங்கள் தப்பி ஓடவில்லை என தெரிவித்துள்ள அவர், அடுத்ததாக யார் கைது செய்யப்படுவார்கள் என்பதில் அரசாங்கம் கவனம் செலுத்துகின்றது. இந்நிலையில், மக்கள் எதிர்கொள்ளும் உண்மையான பொருளாதார சிரமங்கள் புறக்கணிக்கப்படுகின்றன என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
நாடு முழுவதும் குடும்பங்கள் கடுமையான வாழ்க்கைச் செலவுச் சுமையால் அவதிப்படுகின்றன. பொருட்களின் விலைகள் உயர்ந்து வருகின்றன. குடும்பச் செலவுகளைச் சமாளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மக்கள் தங்கள் குடும்பத்தினருக்கு எவ்வாறு உணவு வழங்குவது என்பதையே கேட்கிறார்கள் . அடுத்ததாக யாருக்கு கைவிலங்கு போடவிருக்கிறார்கள் என்பதல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார்.




