ஆபிரிக்க கண்ட நாடான கொங்கோ ஜனநாயகக் குடியரசு மற்றும் உகாண்டாவில் எபோலா நோய்ப்பரவலின் விளைவான இறப்புக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக உள்ளூர் அதிகாரிகள் எச்சரித்துள்ள நிலையில், நோய் பரவும் வேகம் குறித்து ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் டொக்டர் டெட்ரோஸ் அதனோம் கெப்ரேயஸ் நேற்று தெரிவித்தார்.
இந்நோய்க்கு 513 பேர் உள்ளாகியுள்ளதாக சந்தேகிக்கப்படுகின்ற போதிலும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 131 ஆக உயர்ந்துள்ளதாக கொங்கோ சுகாதார அமைச்சர் சாமுவேல் ரோஜர் கம்பா கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், இந்த நோய்ப்பரவல் கொங்கோவின் வடகிழக்கு இடுரி மாகாணத்தைத் தாக்கி வருகிறது. இம்மாகாணத்தில் இதுவரை 30 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எபோலா நோயை ஏற்படுத்தக்கூடிய ஆர்த்தோபோலா வைரஸ்கள் எனப்படும் பல வைரஸ்களில் ஒன்றான புண்டிபுக்யோ வைரஸ் தான் எபோலாவின் மூல காரணி எனவும் குறிப்பிட்டார்.
இதற்கிடையில், உகண்டாவின் தலைநகரான கம்பாலாவில், ஆய்வுகூடத்தில் உறுதிசெய்யப்பட்ட இரண்டு நோய்த்தொற்று பதிவாகியுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் கூறியுள்ளது.
இந்நிலையில் ஆபிரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள், பரந்த பயணத் தடைகள் மக்களின் வாழ்க்கையையும் பொருளாதாரத்தையும் சீர்குலைக்கக்கூடும் என்று சுட்டிக்காட்டியுள்ளது.
உகண்டாவில்..
எபோலா பாதிப்புகள் உறுதிசெய்யப்பட்டதை அடுத்து, உகண்டா கட்டிப்பிடிப்பதற்கும் கை குலுக்குவதற்கும் தடை விதித்துள்ளது.
கொங்கோ நோய்ப் பரவலைத் தொடர்ந்து, தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறும் உகண்டா பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சின் நிரந்தரச் செயலாளர் டாக்டர் டயானா அட்வைன், கை குலுக்குதல், கட்டிப்பிடித்தல் மற்றும் தேவையற்ற உடல் தொடர்புகளுக்கான தற்காலிகத் தடை உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு நேற்று பொதுமக்களை வலியுறுத்தினார்.
கைகுலுக்கி மற்றும் கட்டிப்பிடித்து வாழ்த்துக்கள் தெரிவிப்பதை நிறுத்த வேண்டும் என்று நாங்கள் கூறுகிறோம். இந்த வைரஸ் உடல் தொடர்பைச் சார்ந்துள்ளது எனவும் அவர் ஊடகவியலாளர் சந்திப்பில் கூறினார்.
பொதுமக்கள் தங்கள் கைகளை சோப்பு போட்டு கழுவவும், மதுசாரம் அடிப்படையிலான கை சுத்திகரிப்பான்களைப் பயன்படுத்தவும், காய்ச்சல், வாந்தி அல்லது இரத்தப்போக்கு உள்ளிட்ட ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ துறைக்கு தெரிவிக்கவும் உகண்டா சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
சி.என்.என், டெலிகிராப்



