அமெரிக்கா மூன்று கப்பல்களை இடைமறித்ததை அடுத்து ‘ஹோர்மூஸில்’ பிடியை இறுக்கும் ஈரான்

4 Min Read

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான அமைதிப் பேச்சவார்த்தை ஸதம்பித்து, போர் நிறுத்தமும் காலவரையைற​ையின்றி நீடிக்கப்பட்டிருக்கும் சூழலில் ஹோர்முஸ் நீரிணையில் ஈரான் தனது பிடியை இறுக்கி வருவதோடு ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை தொடரும் அமெரிக்கா, ஈரானின் மூன்று எண்ணெய் கப்பல்களை இடைமறித்துள்ளது.

அமெரிக்காவின் கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை சர்வதேச எண்ணெய் விநியோகத்தில் முக்கிய கடல்வழிப் பாதையாக இருக்கும் ஹோர்முஸ் நீரிணை திறக்கப்பட மாட்டாது என்று ஈரான் எச்சரித்துள்ளது. இந்த நீரிணை ஊடாக செல்ல முயன்ற மூன்று கப்பல்கள் மீது தாக்குதல் நடத்திய ஈரான், அதில் இரு கப்பல்களை கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மறுபுறம் அமெரிக்காவும் தனது முற்றுகையை தொடரும் நிலையில் ஆசிய கடல் பகுதியில் ஈரான் கொடியுடனான மூன்று கப்பல்களை இடைமறித்துள்ளது. இந்தியா, மலேசியா மற்றும் இலங்கைக்கு அருகே இந்த கப்பல்கள் இருந்த நிலைகளில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டிருப்பதாக கப்பல் மற்றும் பாதுகாப்பு தரப்புகளை மேற்கோள்காட்டி ரோய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஈரான் துறைமுகங்கள் மீது முற்றுகையை ஆரம்பித்தது தொடக்கம் 27 ஈரானிய கப்பல்கள் திருப்பி அனுப்பப்பட்டிருப்பதாக அமெரிக்கா முன்னதாக குறிப்பிட்டிருந்தது.

ஹோர்முஸ் நீரிணை மீதான முடக்கம் மற்றும் அமெரிக்காவின் முற்றுகை ஈரான்–அமெரிக்கா இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தையிலும் இழுபறியை ஏற்படுத்தியுள்ளது. எட்டப்பட்ட இரண்டு வார போர் நிறுத்தத்தை காலவயைரையின்றி நீடிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்தபோதும் போர் பதற்றம் பிராந்தியத்தில் தொடர்ந்து நீடித்து வருகிறது.

இந்நிலையில் இந்தப் போர் நிறுத்தம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காலாவதியாவதாக இஸ்ரேலிடம் அமெரிக்கா கூறி இருப்பதாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இஸ்ரேலின் அரச ஒளிபரப்பு நிறுவனமான கான் வெளியிட்டிருக்கும் செய்தியில், ஜனாதிபதி டிரம்ப், ஈரான் மீது நிர்ணயித்த கால வரம்பு சில நாட்களில் முடிவடையும் என்று இஸ்ரேலிடம் அமெரிக்க தெரிவித்திருப்பதாக குறிப்பிட்டுள்ளது.

ஈரானிடம் இருந்து முன்மொழிவு ஒன்றை பெறுவதற்கு கால வரம்பு ஒன்றை ஜனாதிபதி டிரம்ப் நிர்ணயித்ததாக வெள்ளை மாளிகை ஊடகப் பேச்சாளர் கரோலின் லிவிட் முன்னதாக குறிப்பிட்டிருந்தார். ‘ஈரான் தங்கள் நிலையை சரிசெய்ய வேண்டி உள்ளது என்பதாலேயே போர் நிறுத்தத்தை நீடிக்க ஜனாதிபதி டிரம்ப் தீர்மானித்தார்’ என்ற லிவிட் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் பாகிஸ்தான் ஏற்பாடு செய்திருக்கும் இரு தரப்புக்கும் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தையில் பங்கேற்பதை ஈரான் நிராகரித்து வருவதோடு, அமெரிக்க பிரதிநிதிகளும் அதற்காக பாகிஸ்தான் திரும்பவில்லை.

கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது போர் தொடுத்துஇரண்டு மாதங்களை நெருங்கும் நிலையில் இந்தப் போரில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டதோடு பிராந்தியம் எங்கும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. குறிப்பாக சர்வதேச அளவில் ஏற்பட்டிருக்கும் எரிபொருள் நெருக்கடி காரணமாக எண்ணெய் விலையில் பெரும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தப் போரின் மற்றொரு முனையாக மாறிய லெபனான் மீது இஸ்ரேல் நடத்தி வந்த தாக்குதல் தொடர்பில் அமெரிக்காவின் மத்தியஸ்தத்துடன் போர் நிறுத்தம் ஒன்று எட்டப்பட்டபோதும் இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன. தெற்கு லெபனானில் கடந்த புதனன்று இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் குறைந்தது நால்வர் கொல்லப்பட்டதாக லெபனான் அரச செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. தெற்கு லெபனானில் இஸ்ரேலிய படைகள் மீது ஆளில்லா விமானத் தாக்குதலை நடத்தியதாக ஹிஸ்புல்லா அமைப்பு தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையிலான 10 நாள் போர் நிறுத்தம் எதிர்வரும் ஞாயிறன்று காலாவதியாகும் நிலையில் அதனை நீடிப்பதற்கு இரு தரப்பும் வொஷிங்டனில் நேற்று (23) பேச்சுவார்த்தையை ஆரம்பிக்கவிருந்த நிலையிலேயே தாக்குதல்களும் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.

ஈரானுக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா அமைப்பு கடந்த மார்ச் 2 ஆம் திகதி இஸ்ரேல் மீது ரொக்கெட் தாக்குதல் நடத்தியதை அடுத்தே இந்த மோதல் வெடித்தது. அது தொடக்கம் இஸ்ரேல் நடத்திய சரமாரி வான் மற்றும் தரைவழி தாக்குதல்களில் லெபனானில் 2,400இற்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தெற்கு லெபனானில் டைரி கிராமத்தில் பயணித்துக் கொண்டிருந்த கார் ஒன்றின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டதாக லெபனான் அரச செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. டைரேவில் இடிபாடுகளில் இருந்து காயமடைந்த ஊடகவியலாளர் ஒருவரை மீட்க முயற்சிக்கும்போது மீட்பாளர்கள் மீது இஸ்ரேலிய ஆளில்லா விமானம் கையெறி குண்டு ஒன்றை வீசியதாக லெபானின் சிரேஷ்ட இராணுவ அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளளார். இஸ்ரேலின் தாக்குதலில் இரு ஊடகவியலாளர்களும் காயமடைந்திருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. தெற்கு நகரா யோமோரில் இஸ்ரேல் நடத்திய மற்றொரு வான் தாக்குதலில் மேலும் இருவர் கொல்லப்பட்டுள்ளதாக லெபனான் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. போர் நிறுத்தத்தை மீறி காசாவிலும் இஸ்ரேல் தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வரும் நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் ஆறு பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டு மேலும் 18 பேர் காயமடைந்திருப்பதாக காசா சுகாதார அமைச்சு நேற்று (23) வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி கடந்த ஒக்டோபர் 11 ஆம் திகதி போர் நிறுத்தம் அமுலுக்கு வந்தது தொடக்கம் காசாவில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 791 ஆக அதிகரித்திருப்பதோடு மேலும் 2235 பேர் காயமடைந்துள்ளனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *