அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான இரண்டு வார போர் நிறுத்தம் இன்று (22) காலாவதியாகவுள்ள நிலையில் பாகிஸ்தானில் இரண்டாவது சுற்று பேச்சுவார்த்தையை ஆரம்பிப்பதில் நிச்சயமற்ற சூழல் நிலவியதோடு போருக்கு தயாராக இருப்பதாக இரு தரப்பும் பரஸ்பரஸ் எச்சரித்து வருகின்றமை பதற்றத்தை அதிகரித்துள்ளது.
பாகிஸ்தானில் ஏற்பாடாகி இருக்கும் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அமெரிக்க பிரதிநிதிகள் தயாராக இருந்தபோதும் ஈரான் தரப்பில் நேற்று பின்னேரம் வரையில் தமது பங்கேற்பை உறுதி செய்யவில்லை. இந்த பேச்சுவார்த்தை திட்டமிட்டபடி நடைபெறும் என்று அமெரிக்கா நம்பிக்கையை வெளியிட்டதோடு இதில் இணைவது தொடர்பில் ஈரான் பரிசீலித்து வருவதாக அந்நாட்டு மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை அதிகரிப்பது மற்றும் பங்குச் சந்தைகள் எதிர்கொண்டிருக்கும் வீழ்ச்சியை தடுப்பதற்கு ஈரானுடன் உடன்படிக்கை ஒன்றை எட்ட அமெரிக்க ஜானதிபதி டொனால்ட் டிரம்ப் முயன்று வருகின்றபோதும், ஈரான் அணு ஆயுதத்தை மேம்படுத்துவதை அனுமதிக்க முடியாது என வலியுறுத்தி வருகிறார்.
மறுபுறம் மீண்டும் போர் வெடிப்பதைத் தவிர்த்து, தடைகளை தளர்த்தும் வகையில் உடன்படிக்கை ஒன்றை எட்ட முயற்சிக்கும் ஈரான், தனது அணுசக்தி திட்டத்திற்கு தடையாக இல்லாத ஒரு ஒப்பந்தத்தை எட்ட ஹோர்முஸ் நீரிணை மீதான தனது கட்டுப்பாட்டை பயன்படுத்தும் வகையில் அழுத்தங்களை கொடுத்து வருகிறது.
இந்நிலையில் பேச்சுவார்த்தையில் பங்கேற்பது குறித்து ஈரான் சாதகமான முறையில் மீளாய்வு செய்து வருவதாக அந்நாட்டு அதிகாரி ஒருவர் குறிப்பிட்டதாக ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்பதில்லை என்று ஈரான் வெளியிட்ட அறிவிப்பில் இருந்து தளர்வுப் போக்கு ஏற்பட்டபோதும் பாகிஸ்தான் செல்வது குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட்டிருக்கவில்லை.
இன்று (22) புதன்கிழமை பேச்சுவார்த்தையை ஆரம்பிப்பதற்கான சாதகமான சூழல் ஏற்பட்டிருப்பதாக பாகிஸ்தான் தரப்பு குறிப்பிட்டதோடு, உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்படுவதாயின் டிரம்ப் நேரடியாக அல்லது மெய்நிகர் முறையில் பங்கேற்கக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘முன்னேற்ற நிலைமை ஏற்பட்டுள்ளதோடு திட்டமிட்டபடி நாளை (இன்று) பேச்சுவார்த்தை இடம்பெறும்’ என்று பாகிஸ்தான் தரப்பு தெரிவித்துள்ளது.
எனினும் பதற்ற சூழல் தொடர்ந்து நிலவி வருகிறது. ஈரான் சரக்குக் கப்பல் மீது அமெரிக்கா கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்திய தாக்குதலுக்கு ஈரான் வெளியுறவு அமைச்சு நேற்று கண்டனத்தை வெளியிட்டது. அந்தக் கப்பல், அதன் பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரை உடன் விடுவிக்கும்படி வலியுறுத்தியது.
‘ஈரான் தனது தேசிய நலன்கள் மற்றும் பாதுகாப்பை காக்கவும், தனது குடிமக்களின் உரிமைகளையும் மரியாதையையும் பாதுகாக்கவும் அனைத்து திறன்களையும் பயன்படுத்தும்.
மேலும், பிராந்தியத்தில் பதற்றம் தீவிரம் அடைவதற்கு அமெரிக்கா முழு பொறுப்பையும் ஏற்க வேண்டும்’ என்று ஈரான் வெளியுறவு அமைச்சின் அறிவிப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஈரான் துறைமுகங்கள் மீது அமெரிக்கா முற்றுகையை தொடர்வது மற்றும் ஈரான், ஹோர்முஸ் நீரிணையை முடக்கி வருவது அமைதிப் பேச்சுவார்த்தையை ஆரம்பிப்பதில் முட்டுக்கட்டையாக உள்ளது. அமெரிக்காவின் முற்றுகையை தளர்த்துவதற்கு அமைதிப் பேச்சுவார்த்தையில் மத்தியஸ்தம் வகிக்கும் பாகிஸ்தான் வலியுறுத்தி வருவதாக தெரியவருகிறது.
கடந்த திங்கட்கிழமை பேசிய டிரம்ப், ஈரான் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக குறிப்பிட்டபோதும் ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதை அமெரிக்கா ஒருபோதும் அனுமதிக்காது என்றார்.
‘அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி நியாயமான ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தி தமது நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவார்கள் என்று நம்புகிறேன். ஆனால் அவர்கள் அதைச் செய்யும் போது, அவர்களிடம் அணு ஆயுதம் இருக்காது’ என்று டிரம்ப் கூறினார்.
இரண்டு வார போர் நிறுத்தம் எப்போது காலாவதியாகும் என்பது குறித்து அமெரிக்கா குறிப்பிட்டு எந்த விபரத்தையும் வெளியிடவில்லை. அமைதிப் பேச்சுவார்த்தையுடன் தொடர்புபட்ட பாகிஸ்தான் தரப்பு அளித்த விபரத்தின்படி அது இலங்கை நேரப்படி நாளை (23) அதிகாலையில் முடிவுக்கு வரும் என குறிப்பிடப்பட்டுள்ளது. பேச்சுவார்த்தை நடப்பதில் நிச்சயமற்ற சூழல் இருந்தபோதும் பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடுகளை பாகிஸ்தான் முன்னெடுத்து வருகிறது.
இஸ்லாமாபாத்தில் சுமார் 20,000 பாதுகாப்பு அதிகாரிகள் நிலைநிறுத்தப்பட்டிருப்பதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
பேச்சுவார்த்தைக்காக அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸும் நேற்று (21) பாகிஸ்தான் செல்லவிருந்தார். ஈரான் மீது டிரம்ப் விடுத்து வரும் மிரட்டல்களின் தொடர்ச்சியாக கடந்த ஞாயிற்றிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், தனது நிபந்தனைகளை ஈரான் நிராகரித்தால் அதன் அனைத்து பாலங்கள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்களையும் அழிப்பதாக எச்சரித்தார்.
எனினும் ‘போர்க்களத்தில் புதிய திட்டங்களை வெளிப்படுத்த கடந்த இரண்டு வாரத்தில் தயார் நிலையை பெற்றதாகவும்’, ‘அச்சுறுத்தல்களின் நிழலில் நடைபெறும் பேச்சுவார்த்தைகளை ஏற்கமாட்டோம்’ என்றும் ஈரான் பாராளுமன்ற சபாநாயகக் எக்ஸ் சமூகதளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை லெபனான் மற்றும் இஸ்ரேல் இடையிலும் போர் நிறுத்தம் ஒன்று எட்டப்பட்டிருக்கும் நிலையில் இரு தரப்பும் நாளை (23) சந்திக்கவிருப்பதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் உறுதி செய்துள்ளது.
இரு தரப்புக்கும் இடையே 10 நாள் போர் நிறுத்தம் எட்டப்பட்டபோதும் தெற்கு லெபனானில் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது. அங்குள்ள காகையத் அல் ஜிஸிர் சிறு நகரில் இடம்பெற்ற விமானத் தாக்குதலில் அறுவர் காயமடைந்ததாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
காசாவிலும் போர் நிறுத்தம் அமுலில் இருந்தபோதும் இஸ்ரேல் அதனை மீறி நடத்தி வரும் தாக்குதல்களின் தொடர்ச்சியாக நேற்று பெண் ஒருவர் கொல்லப்பட்டதாக அல் ஜசீரா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. காசாவின் வடக்கு கரையோரத்திற்கு அப்பால் இஸ்ரேலிய போர் கப்பல்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டிலேயே அந்தப் பெண் கொல்லப்பட்டுள்ளார்.
முன்னதாக கடந்த திங்கட்கிழமை இஸ்ரேலின் தாக்குதல்களில் காசாவில் ஐவர் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.



