இலங்கை கிரிக்கெட் மீது வழக்கு தொடுத்த: துஷாரவுக்கு உலக கிரிக்கெட் வீரர்கள் சம்மேளனம் ஆதரவு

2 Min Read

இந்திய பீரிமியர் லீக் தொடரில் ஆடுவதற்கு இலங்கை கிரிக்கெட் சபை தடையில்லா சான்றிதழை வழங்க மறுப்பதற்கு எதிராக வேகப்பந்து வீச்சாளர் நுவன் துஷார நீதிமன்றம் சென்றதற்கு உலக கிரிக்கெட் வீரர்களின் சம்மேளம் ஆதரவை வெளியிட்டுள்ளது. விளையாடும் வாய்ப்புக்காக வீரர்கள் சட்ட நடவடிக்கைக்கு தள்ளப்படுவது கவலைக்குரியது என அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலைமை கிரிக்கெட்டில் வீரர்களின் உரிமை மற்றும் நிர்வாகக் கட்டமைப்பு பற்றி பரந்துபட்ட சர்வதேச பிரச்சினை ஒன்றை பிரதிபலிப்பதாக உள்ளது என்று உலகக் கிரிக்கெட் வீரர்களின் சம்மேளனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி டோர்ன் மொப்பர் செய்தி இணையதளம் ஒன்றுக்கு குறிப்பிட்டுள்ளார்.

‘உலகம் முழுவதும் இவ்வாறான பிரச்சினைகள் அதிகரித்து வருவதைக் காண்கிறோம். பொது அறிவின் அடிப்படையில் அவை தடுக்கக் கூடியதாக இருக்கும் என்று நாம் நம்புகிறோம். தங்கள் அடிப்படை உரிமைகளை நிலைநிறுத்துவதற்காக வீரர்கள் நீதிமன்ற நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நிலை உருவாகக் கூடாது.

தற்போது நடைமுறையில் உள்ள தடையில்லா சான்றிதழ் முறை, ஒரு நிர்வாக அமைப்பு ஒரு வீரர் வேறு இடத்தில் வேலை செய்து சம்பாதிப்பதை கட்டுப்படுத்தவோ அல்லது தடுக்கவோ முடியும் என்ற கருத்தின் மீது அமைந்துள்ளது. அதுவும் அவர்களுடன் எந்த ஒப்பந்த உறவும் இல்லாத நிலையில் இந்த சூழல் ஏற்படுகிறது. எந்தத் துறையில் வேலை செய்கின்றவர்களாக இருந்தாலும், இப்படியான நிலையை புரிந்து கொள்வது மிகவும் கடினமாக உள்ளது’ என்று மொப்பர் குறிப்பிட்டுள்ளார். விலையாட்டின் நிலைத்தன்மையை பேணும் அதேநேரம் வீரர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கு உலக கிரிக்கெட் வீரர்களின் சம்மேளம் செயற்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பங்கேற்க தடையில்லா சான்றிதழை வழங்குமாறு இலங்கை கிரிக்கெட் சபைக்கு உத்திரவிடுமாறு நுவன் துஷார கடந்த வாரம் கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். தடையில்லா சான்றிதழை பெறுவதற்கு இலங்கை கிரிக்கெட் மீது வீரர் ஒருவர் வழக்குத் தொடுப்பது இது முதல்முறையாகும்.

இலங்கை கிரிக்கெட் சபை புதிதாக அறிமுகம் செய்திருக்கும் கட்டாய உடல் தகுதி சோதனையில் துஷார தோல்வி அடைந்ததன் காரணமாக அவருக்கு தடையில்லா சான்றிதழ் வழங்க இலங்கை கிரிக்கெட் சபை மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *