ஈரான் போர் தொடர்பான மோடி – ட்ரம்ப் இடையேயான உரையாடலில் எலோன் மஸ்க் பங்குபெற்றது ஏன் என விவாதம் எழுந்துள்ளது.
ஈரான் போர் தொடர்பாக பேசிய மோடி – ட்ரம்ப்
ஈரான் மற்றும் இஸ்ரேல் அமெரிக்கா இடையே கடந்த ஒரு மாதமாக போர் நடைபெற்று வரும் நிலையில், இந்த போர் காரணமாக ஹார்மோஸ் நீரிணையை ஈரான் மூடியுள்ளதால் உலகின் பல்வேறு நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் இந்த போர் தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மற்றும் இந்திய பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக உரையாடினர்.
மேற்கு ஆசியாவின் சூழல் குறித்து பயனுள்ள கருத்துப் பரிமாற்றமும் நடைபெற்றதாகவும், பதற்றத்தைத் தணிப்பதையும், கூடிய விரைவில் அமைதியை மீட்டெடுப்பதையும் இந்தியா ஆதரிக்கிறது, ஹார்முஸ் நீரிணை பாதுகாப்பாக அணுகக்கூடியதாகவும் இருப்பதை உறுதி செய்வது முழு உலகிற்கும் இன்றியமையாதது என இந்த உரையாடல் குறித்து மோடி கருத்து தெரிவித்தார்.
இந்த உரையாடலில், உலகப்பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள எலான் மஸ்க் பங்கு பெற்றிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

அவர் என்ன பேசினார் என்பது குறித்து தகவல் வெளியாக நிலையில், எந்த அரசுப்பதவியிலும் இல்லாத தனிநபர் இரு நாட்டு தலைவர்களுக்கு இடையேயான இந்த அதிகாரப்பூர்வ உரையாடலில் பங்குபெற்றது ஏன் என்பது குறித்து விவாதம் எழுந்துள்ளது.
ட்ரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே முன்னதாக மனக்கசப்பு இருந்த நிலையில், இதன் மூலம் இருவருக்கும் இடையே மீண்டும் சுமூகமான உறவு உள்ளதாக தெரிய வந்துள்ளது.
எலான் மஸ்க் பங்கு குறித்து காங்கிரஸ் கேள்வி
இதேவேளையில், இதில் எலான் மஸ்க் பங்கு பெற்றது குறித்து எதிர்க்கட்சியான காங்கிரஸ் பல்வேறு கேள்விகளை முன்வைத்துள்ளது
இது தொடர்பாக வெளியிட்டுள்ள பதிவில், “உலகளாவிய நெருக்கடி தொடர்பாக இரு நாட்டு தலைவர்களுக்கிடையேயான உரையாடலில் ஒரு தொழிலதிபர் பங்குபெற்றது ஏன்?
எலான் மஸ்க் இதில் பங்குபெற்றதை இந்திய அரசு ஏன் வெளியிடவில்லை? இந்த உரையாடலில் எலான் மஸ்க்கின் பங்கு என்ன?
இது உண்மையிலேயே மேற்கு ஆசிய நெருக்கடி பற்றியதா, அல்லது வேறு ஏதேனும் “வணிக” நோக்கம் இருந்ததா?
போரின் போது ட்ரம்ப் பல்வேறு நாடுகளின் தலைவர்களுடன் பேசினார், ஆனால் அந்த அழைப்புகளில் எந்தவொரு தொழிலதிபரும் கலந்துகொள்ளவில்லை. இது ஏன் மோடியுடன் மட்டும் நடந்தது?
இது பயனுள்ள உரையாடல் என வெள்ளைமாளிகை குறிப்பிட்டுள்ளது. ஆனால் யாருக்கு பயனுள்ளது?
இதன் மூலம் மோடி ஒரு சமரசத்திற்கு உள்ளான பிரதமர், அவர் டிரம்பின் கைகளில் உள்ள ஒரு கைப்பாவையாக உள்ளார் என தெளிவாகிறது.
மோடி வெறுமனே டிரம்பின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றுகிறார். அவர் ஒரு தலைவராக இருப்பதை விட, திரைக்குப் பின்னால் இருந்து கட்டுப்படுத்தப்படும் ஒரு மேலாளரைப் போலவே இருக்கிறார்” என தெறிவித்துள்ளது.




