கோதுமை மாவின் விலை கிலோவுக்கு ரூ.17 அதிகரிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, இலங்கையில் பிரபலமான பல மாவு அடிப்படையிலான உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கவுள்ளன.
அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் அறிவிப்பின்படி, பராட்டா, முட்டை ரொட்டி உள்ளிட்ட மாவு அடிப்படையிலான சிற்றுண்டிகளின் விலை ரூ.5 ஆல் அதிகரிக்கப்படவுள்ளது.
மேலும், இடியப்பத்தின் விலை ரூ.1 ஆலும், அப்பத்தின் விலை ரூ.2 ஆலும் அதிகரிக்கப்படவுள்ளது.
ப்ரிமா சிலோன் மற்றும் செரண்டிப் ஃப்ளோர் மில்ஸ் நிறுவனங்கள் ஆகஸ்ட் 29 முதல் கோதுமை மாவின் விலையை கிலோவுக்கு ரூ.17 ஆல் அதிகரிக்க தீர்மானித்ததைத் தொடர்ந்து இந்த விலை மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதனிடையே, பாண் மற்றும் ஏனைய பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகளும் அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது.
இதுகுறித்து கலந்துரையாடுவதற்காக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் மத்திய குழு நாளை மறுநாள் (31) கூடவுள்ளது.
அன்றைய கூட்டத்தில் கோதுமை மாவு விலை உயர்வின் தாக்கம் குறித்து ஆராயப்பட்டு, பாண் மற்றும் ஏனைய பேக்கரி பொருட்களின் விலைகளை அதிகரிப்பதா என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்துள்ளார்.




