– நுகேகொடையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள உடலுக்கு பல்லாயிரக்கணக்கான இரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி
இலங்கையின் சிரேஷ்ட மற்றும் புகழ்பெற்ற பாடகியான கலாநிதி நந்தா மாலினியின் இறுதிச் சடங்குகள் இன்று மாலை 5.00 மணிக்கு பொரளை பொது மயானத்தில் நடைபெறவுள்ளன.
அவரது மறைவு இலங்கையின் கலைத்துறைக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகக் கருதப்படும் நிலையில், நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள், இரசிகர்கள் மற்றும் கலைத்துறையினர் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
மறைந்த பாடகி நந்தா மாலினி காலமாகும் போது 82 வயதாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்னாரின் உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக நுகேகொடை, விஜயபா மாவத்தையில் அமைந்துள்ள ‘நந்தா மாலினி இசை ஆசிரமத்தில் வைக்கப்பட்டுள்ளது.
இன்று பிற்பகல் 3.30 மணி வரை பொதுமக்களுக்கு அஞ்சலி செலுத்த அவகாசம் வழங்கப்பட்டுள்ளதுடன், அதற்கு முன்னதாக இன்று காலை 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் சமயக் கிரியைகள் நடத்தப்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நாட்டின் முன்னணிப் பாடகர்கள், கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் பலரும் தொடர்ச்சியாக வருகை தந்து தமது இறுதி மரியாதையைச் செலுத்தி வருகின்றனர்.




