நடைமுறை சுற்றறிக்கைக்கு அமையவே சீருடை; பேச்சு மூலம் தீர்வு

2 Min Read
  • இனவாதத்தை தோற்கடித்தே எமது அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது
  • திருத்துவதெனில் பாராளுமன்றில் விரிவான கலந்துரையாடல் அவசியம்

கல்முனை வைத்தியசாலை சீருடை விவகாரத்தை, காற்பந்தாக பயன்படுத்த இனவாதிகளுக்கு ஒரு போதும் இடமளிக்கப் போவதில்லை என சுகாதார, ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இத்தகைய பிரச்சினைகளுக்கு பொது இணக்கப்பாட்டுடன் தீர்வு காணப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் அனைவரும் பொறுப்புடனும், சிறந்த முறையிலும் செயற்பட வேண்டும் என்றும் சமூக வலைத்தளங்களிலோ அல்லது வெளியில் தேர்தலை இலக்காகக் கொண்டு முன்வைக்கும் விடயங்களையோ ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் அவர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தின் போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எம்பி நிஸாம் காரியப்பர் எழுப்பிய கேள்விகளுக்குப் பதில் அளிக்கும் போதே, அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அமைச்சர், இந்த நாட்டில் மூவின மக்கள் வாழ்கின்றனர். இதனால், அனைத்து இன மக்களின் கலாசாரங்களையும் அடிப்படையாகக் கொண்டதாக இந்த நாடு காணப்படுகிறது. அதிகாரத்தை பெற்றுக்கொள்வதற்கும், அந்த அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்வதற்கும் கடந்த காலங்களில் இனவாதம் எனும் நீரில், பலர் நீந்திச் சென்றிருந்தனர். தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இனவாதத்தை தோற்கடித்து அதிகாரத்துக்கு வந்தது. இந்த இரண்டு வருட காலத்தில் பல பிரச்சினைகளுக்கு இரு தரப்பு பேச்சுவார்த்தைகள் ஊடாக தீர்வு காணப்பட்டுள்ளன.

இனவாதிகள், இந்த விடயத்தை காற்பந்தாக பயன்படுத்த நாம் இடமளிக்கப் போவதில்லை.அரச சேவையில் உடை ஒழுங்கு முறைமை உள்ளது. சுகாதார சேவையில் அதற்கான சீருடை வழங்கப்பட்டுள்ளது.மக்களுக்கு சிறந்த சேவையை வழங்குவதற்காகவே சீருடை வழங்கப்பட்டுள்ளது.

2025.01.01 ஆம் திகதி முதல் சுகாதார சேவையில் ஈடுபடும் உத்தியோகத்தர்களுக்கு சீருடை கொடுப்பனவும் வழங்கப்படுகிறது.கல்முனை வைத்தியசாலையில் சீருடையை அடிப்படையாகக் கொண்டு எழுந்த பிரச்சினை சுகாதார அமைச்சுக்கு அறிக்கையிடப்பட்டுள்ளது.

அந்த வகையில், இந்த பிரச்சினையால் பொது மக்கள் பாதிக்கப்படுவதை தடுப்பதற்கும், இனவாதிகளின் நோக்கத்தை தோற்கடிப்பதற்காகவுமே புதிய கனிஷ்ட உத்தியோகத்தர்களுக்கு தற்காலிக இடமாற்றம் வழங்கப்பட்டது.

கடந்த அரசாங்க காலத்தில் விடுக்கப்பட்ட சுற்றறிக்கைக்கு அமைவாகவே, சுகாதார சேவையாளர்களின் சீருடை தொடர்பில் தீர்மானம் எடுக்கப்பட்டது. இந்த சுற்றறிக்கையை திருத்தம் செய்ய வேண்டுமாயின், அதற்கான நடவடிக்கைகளை பாராளுமன்றத்தின் ஊடாக முன்னெடுக்கலாம். அதுவரையில் நடைமுறையில் உள்ள சுற்றறிக்கையே அமுல்படுத்தப்படும். முஸ்லிம் பெண்கள் சுகாதார சேவையில் இணையும் ஈடுபாடு அதிகமாகவே காணப்படுகிறது.

அதனை நாம் வரவேற்கின்றோம்.தற்காலிகமாக வழங்கப்பட்டுள்ள தீர்மானம் பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வாக அமையும். ஆகவே இந்த பிரச்சினைகளுக்கு பொது இணக்கப்பாட்டுடன் தீர்வு காணப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *