வரண்ட கால நிலை மற்றும் பாடசாலை விடுமுறை தினங்களாகவுள்ள இன்றைய நாட்டிகளில் குழந்தைகளின் விசேட பொழுதுபோக்காக பட்டம் விடுதல் மாறியுள்ளதால்,இவ்விடயத்தில் மிகுந்த அவதானம் செலுத்துமாறு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் வைத்திய நிபுணர் டாக்டர் பிரதீப் ரத்னசேகர தெரிவித்துள்ளார். பட்டம் விடும் வேளையில் விபரீதங்கள் மற்றும் விபத்துக்களில் சிக்கிக் கொள்ளும் சிறுவர்களின் தொகை அதிகரித்து வருவதையிட்டே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கவனக்குறைவு மற்றும் பாதுகாப்பை கருத்திற்கொள்ளாது
பட்டம் விடுவதாலே,சிறுவர்கள் விபத்தில் மாட்டிக் கொள்வதாகவும் அவரது அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;
குழுக்களாக பட்டம் விடும்போது ஏற்படும் மோதல்கள் மற்றும் உயரமான இடங்களில் இருந்து பட்டம் விட முயற்சிக்கும்போது தவறி விழுதல் போன்ற காரணங்களால் கடுமையான விபத்துகள் ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுகிறது.பட்டம் விடுவதற்குப் பயன்படுத்தப்படும் நூல்கள் உயர் மின்னழுத்த மின்கம்பிகளுடன் தொடர்புறுவதால், மின்சார அதிர்ச்சிக்குள்ளாகும் அபாயம் காணப்படுகிறது. இதனால் கடுமையான தீக்காயங்களுடன் குழந்தைகள் அல்லது பெரியவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர்.மின்சார அதிர்ச்சியினால் ஏற்படும் தீக்காயங்கள் கைகள், புஜங்கள் மற்றும் சில சந்தர்ப்பங்களில் மார்புப் பகுதியிலுள்ள உடல் திசுக்கள், இரத்த நாளங்கள் மற்றும் நரம்புகளுக்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்தக்கூடும்.
இவ்வாறான சேதங்களை சில சந்தர்ப்பங்களில் சீரமைக்க முடியாத நிலை ஏற்படும். பாதிக்கப்பட்ட உடல் பகுதிகளை அறுவைச் சிகிச்சை மூலம் அகற்ற வேண்டிய நிலையும் ஏற்படக்கூடும்




