இம்ரான் கானை மருத்துவமனைக்கு மாற்றவும் பாகிஸ்தான் உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

2 Min Read

– முன்னாள் பிரதமரின் பாதுகாப்பை உறுதி செய்ய கடும் நிபந்தனை

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் உடல்நிலை மோசமடைந்துள்ளதைக் கருத்திற்கொண்டு, அவரை உடனடியாக மருத்துவமனைக்கு மாற்றுமாறு பாகிஸ்தான் உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

ராவல்பிண்டி நகரிலுள்ள, ஆடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ள இம்ரான் கானுக்கு முறையான மருத்துவ வசதிகள் வழங்கப்படவில்லை என அவரது தரப்பு சட்டத்தரணிகள் முன்வைத்த வாதத்தை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.

அவரது பாதுகாப்பை உறுதி செய்தவாறு இந்த மாற்றத்தை மேற்கொள்ளுமாறு பாதுகாப்புத் தரப்பினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தச் செய்தி உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், அவரது ஆதரவாளர்களிடையே ஒரு நிம்மதியைத் தோற்றுவித்துள்ளது.

சிறையினுள் அவருக்கு வழங்கப்படும் மருத்துவ வசதிகள் குறித்து பல்வேறு தரப்பினரும் கவலைகளை வெளியிட்டு வந்த நிலையில், நீதித்துறையின் நேரடித் தலையீட்டின் மூலம் இந்த அதிரடித் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

73 வயதான முன்னாள் கிரிக்கெட் வீரரும் அரசியல் தலைவருமான இம்ரான் காலை எதிர்வரும் நாட்களில் ஷிஃபா சர்வதேச மருத்துவமனைக்குக் கொண்டு சென்று, செப்டம்பர் 16 ஆம் திகதி வரை அங்கேயே தங்கியிருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இம்ரான் கானுக்கு ஏற்பட்டுள்ள கண் நோய் (CRVO) தொடர்பில் மதிப்பீடு செய்து சிகிச்சை அளிப்பதற்காக விசேட மருத்துவக் குழு ஒன்றை அமைக்குமாறு நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.

அரசாங்க வைத்தியசாலைகளில் வழங்கப்படும் சிகிச்சையில் திருப்தியடையாத காரணத்தால், அவரைத் தனியார் வைத்தியசாலைக்கு மாற்றக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பல மனுக்களை விசாரித்த பின்னரே நீதிபதி ஷாஹித் வஹீத் தலைமையிலான நீதியரசர்கள் குழாம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

ஒரு கைதியின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பு ஆகியன, அடிப்படை மனித உரிமையாகும் என்பதைத் தனது தீர்ப்பில் நீதிமன்றம் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளது.

அவரது தனிப்பட்ட மருத்துவரும் இச்சிகிச்சை நடவடிக்கைகளின் போது உடன் இருக்க வேண்டுமெனக் குறிப்பிட்ட நீதிமன்றம், இதற்கான முழுச் செலவையும் அவரது குடும்பத்தினரே பொறுப்பேற்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

2023 ஆம் ஆண்டு முதல் சிறையில் இருக்கும் இம்ரான் கானுக்குப் போதிய மருத்துவ வசதிகள் மற்றும் தனது குடும்பத்தினர் அல்லது சட்டத்தரணிகளைச் சந்திக்கும் வாய்ப்புகள் மறுக்கப்படுவதாகப் பல்வேறு மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் ஏற்கனவே எழுந்துள்ள சூழலில் இந்த மருத்துவமனை மாற்றம் மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றது. குறிப்பாக, சர்வதேச மன்னிப்புச் சபையும் இம்ரான் கான் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டு அவருக்குச் சரியான முறையில் விசாரணை நடத்தப்படவில்லை எனக் குற்றஞ்சாட்டியிருந்தது.

வைத்தியசாலையில் இம்ரான் கான் தங்கியிருக்கும் காலத்தில் அவரது ஆதரவாளர்கள் மற்றும் கட்சியினர் அப்பகுதியில் எவ்விதமான சட்டவிரோதக் கூட்டங்களையோ அல்லது குழப்பங்களையோ விளைவிக்கக் கூடாது என நீதிமன்றம் கடும் நிபந்தனைகளை விதித்துள்ளது.

அவரது மருத்துவ அறிக்கையை அரசியல் இலாபங்களுக்காகப் பயன்படுத்தக் கூடாது என்றும், அவ்வாறு சட்டத்தை மீறினால் அவருக்கு வழங்கப்படும் விசேட வசதிகள் இரத்து செய்யப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தின் இந்தத் தீர்மானத்தைப் பாராட்டியுள்ள அவரது கட்சித் தொண்டர்கள் மற்றும் தலைவர்கள், இம்ரான் கான் அமைதியான முறையில் சிகிச்சை பெற அனைவரும் ஒத்துழைப்பு வழங்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *