IMF விதித்துள்ள மேலதிக வரிகளை அமுல்படுத்தும் அவசியம் ஏற்படவில்லை

1 Min Read

சர்வதேச நாணய நிதியம் மேலதிகமாக இரண்டு புதிய வரிகளை அறிமுகப்படுத்த யோசனை முன்வைத்திருந்தாலும், தற்போது அவ்வாறான வரிகளை நடைமுறைக்கு கொண்டுவருவது அவசியமில்லை என கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி பிரதியமைச்சர் சதுரங்க அபேசிங்க தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்த அவர், இது தொடர்பாக சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. வரி அறவீடு அதிகரித்துள்ளதால் புதிய வரிகளை அறிமுகப்படுத்த வேண்டிய தேவை குறைந்துள்ளது.

“முன்னர் வரி செலுத்தாதவர்களிடமிருந்தும் தற்போது வரி அறவிடப்பட்டு வருகிறது. அதனால் எமது வருமானம் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட அதிகமாக உள்ளது. சர்வதேச நாணய நிதியம் இரண்டு புதிய வரிகளை முன்மொழிந்துள்ளது. எனினும், எமது வருமானம் திருப்திகரமாக உள்ளதால் அந்த வரிகள் தேவையில்லை. இதுகுறித்து அவர்களுடன் கலந்துரையாடி வருகிறோம்.

அடுத்த ஆண்டில், குறிப்பாக மறைமுக வரிகளின் சில விகிதங்களை குறைக்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது. வரி செலுத்துவோரின் அடித்தளத்தை விரிவுபடுத்துவதன் மூலம் அதனை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

எரிபொருள் மீதான வரிகள் தொடர்பில் கருத்துத் தெரிவித்த அவர், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனமும் இலங்கை மின்சார சபையும் நிலுவைக் கடன்களை முழுமையாகச் செலுத்திய பின்னர், எரிபொருளுக்கு விதிக்கப்பட்டுள்ள வரிகளை நீக்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக தெரிவித்தார். எதிர்வரும் வரவு – செலவுத் திட்டத்தில் மக்களின் வாழ்க்கைச் செலவைக் குறைக்கும் வகையிலான பல நடவடிக்கைகள் உள்ளடக்கப்படவுள்ளது. சுகாதாரம், கல்வி மற்றும் பொதுப் போக்குவரத்து ஆகிய துறைகளுக்கான முதலீடுகள் அதிகரிக்கப்படுவதுடன், நாட்டின் வரிக் கொள்கையிலும் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்படலாம்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *