சீன சைபர் குற்றக் கும்பல்கள்: பல இரகசியங்கள் அம்பலம்

1 View
4 Min Read

கொழும்பு துறைமுக நகரிலிருந்து கடத்திச் செல்லப்பட்டு, பின்னர் எஹலியகொட கரந்தன பிரதேசத்தில் சடலமாக மீட்கப்பட்ட சீனப் பிரஜையின் கொலை தொடர்பான விசாரணைகளின் மூலம், இலங்கைக்கு வருகைதரும் சீன சைபர் குற்ற மாபியா கும்பல்கள் தொடர்பான பல்வேறு புதிய தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கொல்லப்பட்டவர் சைபர் குற்றங்களில் ஈடுபட்டிருந்த சீன மாபியா கும்பலின் தலைவரும் கோடீஸ்வரருமான ஒருவரென விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். அவரைக் கொலை செய்ததாகக் கூறப்படும் சீனப் பிரஜைகளும் மற்றொரு மாபியா கும்பலைச் சேர்ந்தவர்கள் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அவர்கள் வியட்நாம், கம்போடியா உள்ளிட்ட பல நாடுகளை மையமாகக் கொண்டு சைபர் குற்றங்களில் ஈடுபட்டு வந்ததாகவும் தெரியவந்துள்ளது.

ஹாவ் பொன் என்ற பெயருடைய குறித்த நபர் மற்றொரு சீன மாபியா கும்பலால் கொலை செய்யப்பட்டதாகவும் விசாரணைகளில் தகவல் வெளியாகியுள்ளது.

சைபர் குற்றங்கள் மூலம் கிடைக்கும் வருமானத்தில் பங்கு கோரியமை தொடர்பாக ஏற்பட்ட முரண்பாடே இக் கொலைக்கான காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

கொல்லப்பட்ட நபரிடம் கம்போடியா மற்றும் தென் அமெரிக்க நாடான சுரினாமுக்குரிய கடவுச்சீட்டுகள் இருந்துள்ளன. இரண்டு கடவுச்சீட்டுகளிலும் அவரது புகைப்படம் இடம்பெற்றிருந்த போதிலும், பெயர்கள் வேறுபட்டிருந்ததாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர் கம்போடியா கடவுச்சீட்டைப் பயன்படுத்தியே இலங்கைக்கு வந்துள்ளதாகவும், அந்தக் கடவுச்சீட்டு போலியாக தயாரிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் ஆலோசனையின் கீழ் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.இக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களிடமும் வியட்நாம் மற்றும் கம்போடிய கடவுச்சீட்டுகள் இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சைபர் குற்ற வலையமைப்பை வழிநடத்தியதாகக் கூறப்படும் இந்த நபர், சீனர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர்களை இலங்கைக்கு அழைத்து வந்து, ஹெக்கர்களை பயன்படுத்தி கணினி வழி குற்றங்களில் ஈடுபட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அவர் சுமார் ஆறு மாதங்களுக்கு முன்னர் இலங்கைக்கு வந்திருந்ததாகவும் விசாரணைகள் தெரிவிக்கின்றன.இந்த நபர் அவரது கையடக்கத் தொலைபேசியைப் பெறும் நோக்கிலேயே கடத்தப்பட்டு பின்னர் கொலை செய்யப்பட்டதாகவும், அவரது அனைத்து இரகசியத் தகவல்களும் அந்தத் தொலைபேசியில் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், அவரின் வங்கிக்கணக்கில் பல மில்லியன் டொலர் பணம் இருந்ததாகவும், அப் பணத்தை அவரது கையடக்கத் தொலைபேசி ஊடாக வேறு கணக்குகளுக்கு மாற்றுவதே கடத்தலின் பிரதான நோக்கமாக இருந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.இக் கொலை தொடர்பாக ஏழு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்களில் இருவர் கடந்த 23ஆம் திகதி மாலை நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயன்றபோது விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். ஏனையோர் நாட்டை விட்டு வெளியேற முடியாத வகையில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் உயர் பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்தார்.சந்தேகநபர்கள் பயன்படுத்திய வானில் இருந்து ஒரு காற்றழுத்தத் துப்பாக்கி (Air Gun) மீட்கப்பட்டதாகவும், மற்றொரு காற்றழுத்தத் துப்பாக்கி துறைமுக நகரின் பாலம் அருகே கடலில் விழுந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அதை நீர்மூழ்கிக் குழுவினர் மீட்டதுடன், கொல்லப்பட்ட சீனரின் கையடக்கத் தொலைபேசியையும் கடலில் இருந்து கண்டுபிடித்துள்ளனர். சீன மாபியா கும்பல், கடத்தலுக்கு முன்னதாக எஹலியகொட பகுதியில் சுற்றித்திரிந்து, கடந்த 18ஆம் திகதி அப்பகுதியிலுள்ள தனிமையான இடங்களை ஆராய்ந்திருந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், கையடக்கத் தொலைபேசியை ஒப்படைக்குமாறு கோரி அவரை எஹலியகொடைக்கு அழைத்துச் சென்று தாக்கியதாக தெரியவந்துள்ளது. தொலைபேசி தன்னிடம் இல்லை என்று அவர் தெரிவித்ததைத் தொடர்ந்து, கும்பலின் சிலர் மீண்டும் கொழும்பு துறைமுக நகருக்கு வந்து தொலைபேசி கீழே விழுந்துள்ளதா என தேடியுள்ளனர். அப்போது அவர்களின் நடத்தை சந்தேகத்தை ஏற்படுத்தியதால் துறைமுக பொலிஸ் அதிகாரி ஒருவர், தனது கையடக்கத் தொலைபேசியில் அவர்களின் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். இதனையடுத்து, கடத்தல் குறித்து அவருடன் இருந்த இரு சீனர்கள் பொலிஸில் முறைப்பாடு செய்ததும், அந்தப் புகைப்படங்கள் உடனடியாக விமான நிலைய அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டன. அதன் விளைவாக, இக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய இரு சீனர்கள் நாட்டை விட்டு தப்பிச் செல்லும் முன்னர் கைது செய்யப்பட்டனர். விசாரணைகளின் போது, கையடக்கத் தொலைபேசியைக் கண்டுபிடிக்க முடியாததால் கடத்தப்பட்ட நபரைக் கொலை செய்ததாக அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். பின்னர் அவரது சடலத்தை எஹலியகொட கரந்தன பகுதியிலுள்ள காட்டுப்பகுதியில் கற்களால் மூடி மறைத்துவிட்டு, நாட்டை விட்டு தப்பிச் செல்லத் திட்டமிட்டிருந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பொலிஸார் புகைப்படங்களை எடுத்த சமயத்தில் கடத்தல் தொடர்பாக எந்த முறைப்பாடும் பதிவாகவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட இரு சீனச் சந்தேகநபர்களும் 48 மணிநேரம் தடுத்து வைத்து விசாரிக்கப்பட்ட பின்னர், கடந்த 25ஆம் திகதி கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர். அங்கு அவர்கள் இன்று (27) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவு முன்னெடுத்து வருவதுடன், அதற்காக சீனத் தூதரகத்தின் ஒத்துழைப்பும் கிடைத்து வருவதாக உயர் பொலிஸ் அதிகாரியயொருவர் தெரிவித்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *