ஐரோப்பிய ஒன்றியத்தின் கவனத்தை ஈர்க்க செம்மணியில் நேற்று போராட்டம்

1 Min Read

ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதியினரின் கவனத்தை ஈரக்கும் வகையில் நேற்று (22) புதன்கிழமை ஏ -09 வீதியிலுள்ள செம்மணி வளைவுப் பகுதியில் பாரிய ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.

சர்வதேச நீதியை வலியுறுத்தியும் காணாமல்போனோர் அலுவலகம் வெறும் கண்துடைப்பு நாடகமென்றும் இந்த ஆர்ப்பாட்டத்தில் இவர்கள் கோஷமிட்டனர். யாழ்.செம்மணி புதைகுழி அகழ்வு நடவடிக்கைகளை பார்வையிடுவதற்குச் சென்றிருந்த ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இக்குழுவில், ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி, நெதர்லாந்து நாடுகளின் பிரதிநிதிகளுடன், ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் கார்மென் மொரேனோ, ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளான பிரதித் தூதுக்குழுத் தலைவர் கலியா அகிஷேவா, ஒத்துழைப்புப் பிரிவுத் தலைவர் கலாநிதி ஜோஹன் ஹெஸ் ஆகியோர் அடங்கியிருந்தனர்.யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்த இக்குழுவினர், யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற்று புதைகுழி பகுதியை பார்வையிடச் சென்றமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது போராட்டக்காரர்கள் தெரிவித்ததாவது;

உள்ளகப் பொறிமுறையில் எமக்கு நம்பிக்கை இல்லை. காணாமலாக்கப்பட்டோருக்கான அலுவலகம் என்பது வெறும் கண்துடைப்பாகும்.நாளாந்தம் சித்துபாத்தி மனிதப் புதைகுழியிலிருந்து வெவ்வேறு விதத்திலான கொடூரங்களை எடுத்துக்காட்டும் வகையில்,மனித என்புத் தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்படுகின்றன. எனவே இந்த அநீதிக்கு சர்வதேச தீர்வே வேண்டும்.

செம்மணி சித்துபாத்தி மனிதப்புதைகுழி அகழாய்வில் இதுவரை 467 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.இந் நிலையில், இவ்விடயம் தமிழ் இன அழிப்பின் முக்கிய சான்றாக இருப்பதாகவும், அதனால் சுயாதீனமான சர்வதேச நீதி விசாரணை அவசியமெனவும் இவர்கள் வலியுறுத்தினர். காணாமலாக்கப்பட்டோர் சங்கத்தினர், யாழ். பல்கலைக்கழக மாணவர்கள், அரசியல் பிரமுகர்கள், மதத்தலைவர்கள், சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் இப்போராட்டத்தில் கலந்துகொண்டனர்.ஜேர்மனி தூதுவர் கலாநிதி பெலிக்ஸ் நியுமன், பிரான்ஸ் தூதுவர் ரெமி லம்பேர்ட், இத்தாலியத் தூதுவர் டாமியானோ பிராங்கோவிக், நெதர்லாந்து தூதுவர் விபே டி போயர் ஆகியோரும் இவ்விஜயத்தில் இடம்பெற்றிருந்தனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *