எரிவாயு, மின்சாரப் பற்றாக்குறை, பலவீனமான ஏற்றுமதித் தேவை உள்ளிட்ட பல காரணங்களால் ஜனவரி முதல் மார்ச் வரையான காலாண்டில் பங்களாதேசத்தின் கைத்தொழில்துறை உற்பத்தியில் வீழ்ச்சி கண்டிருப்பதாக அந்நாட்டு புள்ளியியல் பணியகம் நேற்று முன்தினம் வெளியிட்ட தரவுகள் சுட்டிக்காட்டியுள்ளன.
இந்த வீழ்ச்சி நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகத்தைப் பாதித்துள்ளது என்றும் அப்பணியகம் தெரிவித்துள்ளது.
2020 நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலாண்டில் உற்பத்தி 14.94 சதவீதம் வீழ்ச்சி கண்டது. அதற்கு கொவிட் பெருந்தொற்று காரணமான நாடு தழுவிய முடக்கமே காரணம். அதன் பின்னர், இந்த சமீபத்திய வீழ்ச்சி ஏற்படும் வரை அடுத்தடுத்த காலாண்டுகளில் உற்பத்தி சாதகமாகவே இருந்தது.
நீண்டகாலமாக நிலவும் நிச்சயமற்ற தன்மையே இந்த சமீபத்திய சரிவுக்குக் காரணம் என்று பொருளாதார நிபுணர்கள் கூறியுள்ளனர். இந்நிலை, வர்த்தக துறையையும் முதலீட்டு துறையையும் விரிவாக்கம் செய்வதை ஊக்கமிழக்கச் செய்துள்ளது.
கைத்தொழில்துறையின் சுருக்கமும், விவசாயம் மற்றும் சேவைகள் துறைகளில் ஏற்பட்ட மந்தமான வளர்ச்சியுமே இந்நிலைக்கு காரணம். கடந்த நிதியாண்டின் இதே காலப்பகுதியில் கைத்தொழில்துறை வளர்ச்சி 3.33 சதவீதமாகப் பதிவானதாகவும் அப்பணியகம் மேலும் தெரிவித்துள்ளது. டெய்லி ஸ்டார்




