போதையில் வாகனம் செலுத்திய 4 பஸ் சாரதிகள்

1 Min Read

பொதுப் போக்குவரத்தில் ஈடுபடும் பயணிகள் பாதுகாப்பாகத் தங்களது பயணங்களை மேற்கொள்வதை உறுதி செய்யும் நோக்கில், ஆபத்தான போதைப்பொருட்களைப் பயன்படுத்தும் சாரதிகளைக் கண்டறியும் விசேட சோதனைத் திட்டமொன்று நேற்று (16) முற்பகல் மாகும்பர பன்முக போக்குவரத்து மத்திய நிலையத்தில் முன்னெடுக்கப்பட்டது.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர்ப்புற அபிவிருத்தி அமைச்சின் “சாலைப் பாதுகாப்புத் திட்டத்தின்” கீழ், தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தின்விசேட நடமாடும் ஆய்வகப் பேருந்தைப் பயன்படுத்தி இந்த அதிரடிச் சோதனைகள் நடத்தப்பட்டன.

மாகும்பர போக்குவரத்து மத்திய நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ்களின் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் உட்பட சுமார் 150 பேர் இந்த திடீர் சிறுநீர் மற்றும் மருத்துவப் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர்.

சோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்களில் 4 சாரதிகள் ஆபத்தான போதைப்பொருட்களை உட்கொண்டிருந்தமை பரிசோதனைகளின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தின் விசேட வைத்திய அதிகாரி வைத்தியர் என். ஏ. அபேசேகர தலைமையிலான மருத்துவக் குழுவினர் இந்த சோதனைகளை முன்னெடுத்தனர்.

அண்மைக்காலமாக வீதி விபத்துக்கள் அதிகரிப்பதற்கும், வீதி ஒழுக்கக் கட்டுப்பாடுகள் மீறப்படுவதற்கும் சாரதிகள் போதைப்பொருள் பாவிப்பதே முக்கிய காரணியாகக் கண்டறியப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், சோதனையில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக உறுதி செய்யப்பட்ட 4 சாரதிகளுக்கும் எதிராக அவர்கள் பணிபுரியும் நிறுவனங்களின் ஒழுக்காற்று விதிகளின் கீழ் அதிகபட்ச தண்டனை வழங்கப்படும்.

நாட்டின் பொதுச் சட்டத்தின் கீழ், பொலிஸாரினால் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இலங்கை பொலிஸார், போக்குவரத்து அமைச்சு மற்றும் தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனம் ஆகியன இணைந்து இந்த போதைப்பொருள் கண்டறிதல் விசேட வேலைத்திட்டத்தை நாடு தழுவிய ரீதியில் தொடர்ச்சியாக முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளன.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *