நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பது தொடர்பில் அரசாங்கம் தொடர்ந்தும் பரிசீலித்து வருவதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். நீதியமைச்சினால் சமர்ப்பிக்கப்படும் அறிக்கைகள் மற்றும் தகவல்களைக் கவனத்திற்கொண்டே எதிர்கால நடவடிக்கைகளை முன்னெடுக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலே, அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இவ்விவகாரம் தொடர்பில் அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்டது. இதன்போது பல விடயங்கள் கவனத்திற் கொள்ளப்பட்டன. நாட்டின் நீதிமன்றக் கட்டமைப்பில் உயர்நீதிமன்றம் முதல் நீதவான் நீதிமன்றம் வரை பல வருடங்களாக வழக்குகள் குவிந்துள்ளன.
மறுபுறம் நீதிபதிகளுக்கு அந்த வழக்குகளை விரைவாக நிறைவு செய்வதற்கான தேவைகள காணப்பட்டாலும் அவர்களுக்கும் பல்வேறு சிக்கல்கள் காணப்படுகின்றன. நீதிமன்றங்கள் தொடர்பில் மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட வேண்டுமானால் இந்த வழக்குகளை விரைவுபடுத்துவது முக்கியமாகும். அதேபோன்று சில நீதிமன்றங்கள் கொழும்பை கேந்திரமாகக் கொண்டு செயல்படுவதால் அதிலும் சிக்கல்கள் காணப்படுகின்றன.
2020 ஆம் ஆண்டு 20 ஆவது திருத்தத்தின் ஊடாக உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 11லிருந்து 17 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் 12லிருந்து 20 ஆக அதிகரிக்கப்பட்டனர். இத்தகைய பின்னணியில் சில குறைபாடுகள் காணப்படுகின்றன.
அவற்றை கவனத்திற் கொண்டு நீதிமன்றங்களுக்கான நீதிபதிகளை இணைத்துக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவ்வாறு 50 பேரை நியமிப்பதற்கு முயன்றபோதும் 33 பேரையே நியமிக்க முடிந்துள்ளது.
அது தொடர்பில் அரசாங்கம் தொடர்ந்து ஆராய்ந்து வருகிறது.
இவ்விடயங்களை அறிக்கை விடுவதற்கான பொறுப்பை நீதியமைச்சுக்கு அமைச்சரவை ஒப்படைத்துள்ளது.
அந்த வகையில் நீதி அமைச்சர் சமர்ப்பிக்கும் அறிக்கையை கவனத்திற்கொண்டே அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.




