பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதோடு, கடல்சார் பாதுகாப்பில் ஒத்துழைப்போடு செயற்படவும் நியூசிலாந்தும் இந்தியாவும் இணக்கம் கண்டுள்ளன.
உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு வெள்ளியன்று இரவு நியூசிலாந்து நாட்டை சென்றடைந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸனுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நேற்று முன்தினம் மேற்கொண்டார்.
இப்பேச்சுவார்த்தையின் போது இருதரப்பு இராஜதந்திர உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளன.
நியூசிலாந்து தலைநகரில் நடைபெற்ற இப்பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட அறிக்கையில், இருதரப்பு உறவுகள் மூலோபாய கூட்டாண்மை நிலைக்கு உயர்த்தப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தோ – பசுபிக் பிராந்திய ஸ்தீரத்தன்மை குறித்த கவலைகள் நிலவிவரும் சூழலில், பிராந்தியத்தில் பகிரப்பட்ட நலன்களை அடிப்படையாகக் கொண்டு பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திடவும், கடல்சார் பாதுகாப்பில் அதிக ஒத்துழைப்புடன் செயற்படவும் இருநாடுகளும் உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ரொய்ட்டர்ஸ்




