கட்டாரின் முன்னாள் அமீர் ஷேக் ஹமத் பின் கலீஃபா அல் தானி தனது 74 ஆவது வயதில் நேற்று காலமானார். 1995 முதல் 2013 வரை கட்டாரை ஆட்சி ஷேக் ஹமத், எரிசக்தி வளம் நிறைந்த கட்டார் வளர்ச்சியின் முக்கிய சிற்பிகளில் ஒருவராகத் திகழ்ந்தார்.
இறைவனின் கட்டளை மற்றும் தலைவிதியின் மீது அசைக்க முடியாத நம்பிக்கையுடன், நேற்று காலை காலமான, மறைந்த அமீர் ஷேக் ஹமத் பின் கலீஃபா அல் தானியின் மறைவால் தேசத்திற்கு ஏற்பட்ட பெரும் இழப்பிற்காக அமீரி திவான் துக்கம் அனுசரிக்கிறது. இறைவன் அவர் மீது கருணை காட்டுவானாக’ என்று அமீரி திவான் நேற்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவரது மறைவையொட்டி இன்று முதல் நான்கு நாட்களுக்கு கட்டாரில் பொதுத் துக்க தினம் அறிவிக்கப்பட்டுள்ளது. அரச நிறுவனங்கள் மற்றும் பொது அமைப்புகளில் பணிகள் இடைநிறுத்தப்படும். கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




