குற்றவாளிக்கு போலி கடவுச்சீட்டு தயாரிக்க உதவிய மற்றுமொரு உயர் அதிகாரி கைது!

1 Min Read

இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் பிரதி கட்டுப்பாட்டாளர் (நிர்வாகம்) ஒருவர், போலி வெளிநாட்டு கடவுச்சீட்டு ஒன்றை வழங்க உதவிய குற்றச்சாட்டின் கீழ் கொழும்பு மோசடி விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று (06) மேற்கொள்ளப்பட்ட இந்த அதிரடி நடவடிக்கையானது, திணைக்களத்தினுள் இடம்பெற்று வரும் முறைகேடுகள் குறித்த விசாரணைகளின் ஒரு முக்கிய திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.

குறித்த உயர் அதிகாரி, முறையாக ஆவணங்களைச் சரிபார்க்காமல் கடவுச்சீட்டு ஒன்றை வழங்கியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளார்.

குறிப்பாக, இந்தியாவின் சென்னையிலிருந்து நாடுகடத்தப்பட்ட, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரின் புகைப்படத்தை, வேறொரு நபரின் தனிப்பட்ட விபரங்களுடன் இணைத்து கடவுச்சீட்டு விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்ய அவர் உதவி வழங்கியமை முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் மாத்தறை பிரதேசத்தைச் சேர்ந்த 51 வயதுடையவர் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு ஒன்றின் அடிப்படையில், நீதவான் வழங்கிய அறிவுறுத்தல்களுக்கு அமைவாகவே கொழும்பு மோசடி விசாரணைப் பிரிவினர் இந்த விசாரணைகளை முன்னெடுத்து அவரைக் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *